×
Saravana Stores

மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவை: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: தொடர் மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக, விமான பயணிகளுக்கு வாடகை கார்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், மழையை காரணம் காட்டி வாடகை கார்களுக்கு, கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், விமான பயணிகளிடமிருந்து அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் சென்னை விமான நிலைய பயணிகளின் கோரிக்கையை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்றுக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு முதல் மாநகர பேருந்துகள், சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய வருகைப் பகுதி, சர்வதேச விமான நிலைய வருகைப் பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து, விமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. குறிப்பாக கிளாம்பாக்கம், கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மாநகரப் பேருந்துகள் அவ்வப்போது சென்னை விமான நிலையத்திற்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

இவை சிறப்பு பேருந்துகள் இல்லை. வழக்கமாக சென்னை விமான நிலையத்திற்கு வெளிப்பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் செல்லும் சாதாரண மாநகர பேருந்துகளே விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்வது போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநகர பேருந்துகள், புயல் கரையைக் கடந்து மழை ஓயும் வரையில் விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இந்தப் பேருந்துகளை மழை காலத்திற்கு மட்டும் அல்லாமல், நிரந்தரமாக சென்னை விமான நிலையத்திற்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விமானப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல் விமான நிலையத்திற்குள் மாநகர பஸ் சேவை: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai airport ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...