- முனிசிபல் கார்ப்பரேஷன், போலீஸ், தீயணைப்பு படை 3 துறைகள்
- சென்னை
- சென்னை மாநகராட்சி
- பெருநகர போலீஸ்
- தீயணைப்பு துறை
- தின மலர்
சென்னை: சென்னையில் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கை சென்னை மாநகராட்சி, பெருநகர காவல்துறை, தீயணைப்பு துறை ஆகிய 3 துறை அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு உபகரணங்கள் மூலம் பணியாற்றி வெள்ள நீரை வெளியேற்றி சாதனை படைத்துள்ளனர். மழை. வெள்ள முன்னேற்பாடு பணிகளுக்கு,முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மூன்று துறைகளான சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது.
மழைநீர் வடிகால்வாய்களில் மழை நீர் வெளியேறும் வகையில் அசுர வேகத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் தூர்வாரப்பட்டது. பக்கிங்காம் கால்வாயில் உள்ள முகத்தூவாரம் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டது. பெருநகர முழுவதும் நீர்வாழி பாதையில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் 15 மண்டலங்கள் வாரியாக வெள்ள பாதிப்பை சரிசெய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் தலைமையில் 22 ஆயிரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் 1000 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர காவல்துறை அமைத்த கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் புகார்கள் பெறப்பட்டது. மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்க அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களை பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார். தாழ்வான இடங்களை அந்தந்த காவல்நிலையம் இன்ஸ்பெக்டர்கள் மூலம் அடையாளம் கண்டு 35 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 12 துணை கமிஷனர்கள், 4 இணை கமிஷனர்கள் தலைமையில் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கவுன்சிலர்களுக்கு அவரவர் பகுதியில் உள்ள நிலைமைகள் தெரியும் என்பதால் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் மீட்பு பணிகளில் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், திமுக பகுதி செயலாளர்கள் மூலம் எளிமையாக மீட்பு பணிகளை செய்தனர். 35 இடங்களில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் அழைப்புகளின் படி, சம்பந்தப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகளுக்கு தகவல் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள போலீசாரின் பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து வெள்ள பாதித்த பகுதிகளில் சிக்கி தவித்த பொதுமக்களை மீட்டனர்.
வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து ரப்பர் படகுகள் மூலம் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர். சென்னை சாலையில் கனமழையால் 77 பெரிய மரங்கள் விழுந்து கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவற்றை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மரம் அறுக்கும் இயந்திரம் உதவியுடன் உடனுக்குடன் அகற்றப்பட்டது. மழை விட்ட 4 மணி நேரத்தில் 3 அரசு துறை அதிகாரிகள் பம்பரமாக சுழன்று சென்னையில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றி சாதனை படைத்துள்ளனர். வெள்ள நீர் வடித்த சாலைகளை சரிசெய்ய வெளிமாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை வரவழைத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மழை நீர் தேங்கிய சுவடே இல்லாமல் சென்னை நேற்று காட்சி அளித்தது.
The post மாநகராட்சி, போலீஸ், தீயணைப்பு படை 3 துறைகள் அசுர வேகத்தில் வெள்ள நீரை வெளியேற்றி சாதனை appeared first on Dinakaran.