*புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி தகவல்
சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்பை எதிர்கொள்ள 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் தயாராக உள்ளனர் என புதிதாக பொறுப்பேற்ற கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்ட மின்துறை அலுவலகத்தில் புதிய கண்காணிப்பாளர் பெறுப்பேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், புதிய கண்காணிப்பாளராக இஸ்மாயில் கான் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்ட மக்களுக்கு மின்சாரம் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கட்டணம் வசூலிக்கப்படும்.
விவசாய நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், புதியதாக மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் மின்சாரம்
தங்கு தடை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ராயல் சீமா மாவட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை பாதிப்பு ஏற்படும் என ஆந்திர மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் ராயல் சீமா மாவட்டங்களில் மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மழையால் சேதமடையும் மின்கம்பங்கள், ஒயர்களை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.மழையால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மின்சார துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைப்படாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்களை பணியில் அமர்த்தி 24 மணி நேரமும் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கண்காணிப்பாளருக்கு, மின்சாரத்துறை ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post சித்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்பை எதிர்கொள்ள 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் தயாராக உள்ளனர் appeared first on Dinakaran.