*திம்மராஜபுரம் குடிநீர்தொட்டியில் கசிவு என பொதுமக்கள் புகார்
நெல்லை : நெல்லை மாநகராட்சி குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கூடைகளில் குப்பைகள் நிறைந்த கூடைகளோடு பெண்களை அழைத்துவந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே திம்மராஜபுரம் குடிநீர்த் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக மேயரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நெல்லை மாநகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை நடந்தது.
உதவி கமிஷனர்கள் ஜான்சன் தேவசகாயம், சந்திரமோகன், சுகி பிரேமலா முன்னிலை வகித்தனர். இதில், மாநகர சுகாதார அலுவலர்கள் ராணி, அரசகுமார், உதவி செயற்பொறியாளர் பேரின்பம், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், முருகன், அந்தோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுக்களாக எழுதி வந்து கொடுத்ததோடு உரிய தீர்வுகாண வலியுறுத்தினர்.
இந்நிலையில் 7வது வார்டு கவுன்சிலரான இந்திரா மணி, தனது வார்டுக்கு உட்பட்ட பாளை எம்கேபி நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் நிறைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இதற்காக குப்பைகள் நிறைந்த கூடைகளோடு வார்டில் உள்ள பெண்களோடு கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் குறைகளை மேயர் ராமகிருஷ்ணன் கேட்டறிந்தார். அப்போது 7வது வார்டுக்கு உட்பட்ட கென்னடி தெரு, திருமலை தெரு, திருவள்ளுவர் ெதரு, சந்தனமாரியம்மன் தெரு, ஆசாத் ெதரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குப்பைகளை அள்ள கடந்த சில தினங்களாக தூய்மைப் பணியாளர்களே வரவில்லை என மேயரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து குவிந்துக் கிடக்கும் அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்றிட மேயர் ராமகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகநாதன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 5வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர், சங்கீதா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் குப்பை வண்டிகள் இல்லாத காரணத்தால் தூய்மைப் பணியாளர்கள் சாக்குப் பைகளில் குப்பைகளை அள்ளி, தோளில் சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது. எனவே தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, குப்பை அள்ளும் வண்டிகளை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
5வது வார்டுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. அத்துடன் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வால்வு ஆபரேட்டரும் இல்லை. எனவே வால்வு ஆபரேட்டரை உடனடியாக நியமித்து நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே நெல்லை மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் கந்தன் தலைமையில் வார்டு மக்கள் அளித்த மனு விவரம்: கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் வண்ணார்பேட்டையின் பல்வேறு இடங்களில் மழைநீர் செல்ல வழியின்றி நாட்கணக்கில் தேங்கி நின்றது. பாலாஜி நகரில் இருந்து மழைநீர் வெளியேற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் பாலம் தொடங்கி இளங்கோ நகர் வரை மழைநீர் வடிகால் அமைத்து தருவது அவசியம் ஆகும். இவ்வாறு மனுவில் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை மாவட்ட மழலையர்கள் தொடக்கப்பள்ளிகளின் சங்கத் தலைவர் தென்னரசு, துணைத்தலைவர் சின்னநம்பி மற்றும் நிர்வாகிகள் மேயரிடம் அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மழலையர் தொடக்கப்பள்ளிகள், சுகாதார சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் 30 ஆண்டுகளாக செயல்படுகின்றன. எனவே, அப்பள்ளிகளுக்கு தாமதமின்றி சுகாதார சான்றிதழ்கள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு 12வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி அளித்துள்ள மனுவில் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு மதுரை சாலையின் வர்த்தக நிறுவனங்களின் பின்புறமுள்ள ஓடை, தனியார் மருத்துவமனை அருகேயுள்ள ஓடை, தியேட்டர் அருகேயுள்ள ஓடை உள்ளிட்ட அனைத்து ஓடைகளை முறையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும். குறிப்பாக மழைநீர் தேங்காவண்ணம் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். செல்வி நகரில் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
The post நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குப்பை கூடைகளோடு பெண்களை அழைத்து வந்த கவுன்சிலரால் பரபரப்பு appeared first on Dinakaran.