×

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 3வது புத்தக திருவிழா 18ம் தேதி துவக்கம்

*27ம் தேதி வரை நடக்கிறது

ஊட்டி : நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வரும் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை 3வது நீலகிரி புத்தக திருவிழா – 2024 நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகளவு கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார். சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும்.

புத்தக வாசிப்பினை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல சென்னை புத்தக காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் புத்தக காட்சிகள் மற்றும் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு ரசித்தது மட்டுமின்றி ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். மேலும், பல்வேறு தலைப்புகளில் நாள்தோறும் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், கவியரங்கம், மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நூலகத்துறை சார்பில் 3வது நீலகிரி புத்தக திருவிழா 2024 வரும் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது. இதற்காக புத்தக அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்படும் இத்திருவிழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அதிகம் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. புத்தக திருவிழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3வது புத்தக திருவிழா வரும் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தக திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், அரசுத்துறைகள் சார்ந்த 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதில், முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, சாகித்ய அகாடமி விருதாளர் நிர்மாலயா, கலைமாமணி கு.ஞானசம்பந்தம், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஊடகவியலாளர் கார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர், பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இப்புத்தக திருவிழாவில் உணவரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

இப்புத்தக திருவிழாவானது மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே, இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 3வது புத்தக திருவிழா 18ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : 3rd Book Festival ,Ooty Tribal Cultural Center ,Ooty ,3rd Nilgiri Book Festival ,Nilgiri District Administration ,book festival ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 426 பயனாளிகளுக்கு ரூ.12.15 கோடியில் அரசின் நலத்திட்ட உதவி