* மழைநீர் வெளியேற்றும் பணியில் போலீசார்
* அமெரிக்க துணை தூதரம் இன்று மூடல்
சென்னை: கனமழை காரணமாக சென்னை முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக தி.நகர், அண்ணாநகர், பிராட்வே, மயிலாப்பூர், மந்தைவெளி, தேனாம்பேட்டை, அடையாறு, சாந்தோம், மாதவரம், எம்எம்டிஏ ஆகிய பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாற்று பாதைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இரு சக்கர வாகனங்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்தனர். தி.நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால், மேட்லி சுரங்கப்பாதை, கண்ணாம்மாபேட்டை, முத்துரங்கன் சாலை, 17 அடி சாலை, அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல் பிராட்வே சந்திப்பு, தாணா தெரு, ஈவெரா சாலை எவரெஸ்ட் கட்டிடம், ஐயப்பன் கோயில், குருசாமி பாலத்தின் கீழ், இளைய பெருமாள் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை, மாதவரம் ரவுண்டானா, எம்எம்டிஏ, அண்ணாநகர் 6வது அவென்யூ, சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் வரை நேற்று இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணி காரணமாக சாலைகளில் இருபுறங்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல முடியாமல் நகர்ந்து செல்லும் காட்சிகளை காண முடிந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரம் இன்று ஒரு நாள் மட்டும் விசா தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கும் மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
The post சாலைகளில் வெள்ளப் பெருக்கு சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.