சாத்தான்குளம்: கலியன்விளையில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளம் மூடப்படாமல் கிடப்பில் கிடப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட கலியன்விளையில் 3 தெருக்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கூடுதலாக கூட்டுக்குடிநீர் மூலம் குடிநீர் வழங்கிட குழாய் பதிக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பின் குடிநீர் குழாய் பதிக்கப்படாமல் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி குழந்தைகள், முதியோர் பள்ளத்தில் விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து பள்ளத்தை மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள இந்திராநகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சிதைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சிறிய மழை பெய்தாலும் அதில் தண்ணீர் தேங்கி வழிந்தோட முடியாமல் காணப்படுகிறது. எனவே சிமெண்ட் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கலியன்விளையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.