திருச்சி: டெல்டாவில் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதேபோல் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுகை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பொழிந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விடிய விடிய மழை நீடித்தது. இன்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மழை காரணமாக அம்மாபேட்டை, சாலியமங்கலம், உடையார் கோவில், விழுதூர், குழிமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் ஒரத்தநாடு திருமத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் சம்பா இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விளைநிலங்கள் ஏரி போல் காட்சியளிக்கிறது.
திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி, காளாச்சேரி, மேலபூவனூர், ராயபுரம், பூவனூர், பரப்பனாமேடு, அனுமந்தபுரம், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட இடங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வைரிசெட்டிபாளையம், கோட்டபாளையம், வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் 1500 பைபர் படகு, 800 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகளை கரையில் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். சுமார் 1500 பேர் கடலுக்கு செல்லவில்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்கு தெரு பேட்டை சாலையில் உள்ள மதியலங்காரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் இருந்த சுற்றுச்சுவர் மற்றும் கழிவு நீர் வடிகால் நேற்று நள்ளிரவு கன மழையின்போது இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி முகப்பு கேட்டு இணைக்கப்பட்டிருக்கும் தூண் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
The post டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம் appeared first on Dinakaran.