×
Saravana Stores

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவி

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தாட்கோ சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது, அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், ஆர்டிஓ மந்தாகினி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 பேர் மனு அளித்தனர். அதன்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, தரைதளத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, துறைவாரியாக ஆய்வு நடத்தினார். மேலும், 2 நபர்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடனுதவிக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு முறைகேடாக விற்பனை செய்ய முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

இந்நிலையில், மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கம் போல கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, நேற்று குறைதீர்வு கூட்டத்துக்கு மக்கள் வருகை குறைந்து காணப்பட்டது.

புதுப்பொலிவு பெறும் கலெக்டர் அலுவலகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தர இருப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. மழை காரணமாக துணை முதல்வரின் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.எனவே, துணை முதல்வரின் வருகைக்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்திருந்த, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை துணை செயலாளர் பிரதாப், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ- சேவை மையத்தை பார்வையிட்டார்.

மேலும், துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, கலெக்டர் அலுவலக வளாகம் புதுப்பொலிவு பெறுகிறது. அதையொட்டி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம் சீரமைக்கப்படுகிறது. அதோடு, கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய வண்ணம் தீட்டும் பணி நடைபெறுகிறது.

The post திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் சுயதொழில் தொடங்க வங்கிக் கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Bank ,Collector ,Bhaskara Pandian ,Tiruvannamalai ,TADCO ,Thiruvannamalai Collector ,Office ,
× RELATED திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்