*டீன் ரேவதி பாலன் நெகிழ்ச்சி
தியாகராஜ நகர் : மருத்துவக் கல்வி பயில்வது ஒரு வரம். எனவே மருத்துவ துறையில் சிறந்து, பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என முதலாமாண்டு மாணவ, மாணவியர் அறிமுக நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் கூறினார்.நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா ‘ரம்யம் 2024’ என்ற தலைப்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு பேசியதாவது:
இந்தக் கல்லூரியில் தற்போது பணியாற்றும் டாக்டர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக கருதி கல்வியை மேம்படுத்த உழைக்கிறோம். மருத்துவக்கல்வி என்பது வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த வரம். இதில் உங்களின் பெற்றோரின் பங்கு முக்கிய இடம்பெற்றுள்ளது. உங்களது வாழ்நாளில் எந்த நேரத்திலும் பெற்றோரை மறக்கக் கூடாது. மருத்துவக் கல்வியை சிறப்பாக பயின்று உலக அளவில் மருத்துவத் துறையில் சாதனை படைக்க வேண்டும்.
தமிழகத்தில் 3வது பெரிய மருத்துவக் கல்லூரியான நெல்லை மருத்துவக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதுவும் வைர விழாவை கொண்டாடும் 60ம் ஆண்டு பேட்ஜில் நீங்கள் இணைந்துள்ளீர்கள். இதற்காக நடத்தப்பட உள்ள ஆண்டு விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். நெல்லை மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து கண்டியப்பேரி மருத்துவமனையும் 100 படுக்கைகளுடன் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ராகிங் தொல்லை எதுவும் கிடையாது. எனவே பெற்றோர் எந்த கவலையும் பட வேண்டாம். கல்லூரியை பசுமை வளாகமாக பராமரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுரேஷ் துரை வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகளின் தலைவர்கள் பேசினர். முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
செல்பி பாயின்ட்
60வது ஆண்டு வைரவிழா ஆண்டில், மருத்துவக்கல்லூரி அறிமுக விழாவிற்கு வருகை தந்த முதலாமாண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரை மூத்த மாணவிகள் பன்னீர் தெளித்தும், மலர்க்கொத்து வழங்கியும் வரவேற்றனர். மேலும் 4 இடங்களில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. இதில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தனியாகவும், பெற்றோருடனும் செல்பி எடுத்துக் கொண்டனர்.
The post நெல்லையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி மருத்துவக் கல்வி பயில்வது வாழ்க்கையில் கிடைத்த வரம் appeared first on Dinakaran.