*கூண்டு வைத்து பிடிக்க திட்டம்
கடையம் : கடையம் அருகே கரடி தாக்கி மூதாட்டி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது என்று வனச்சரகர் கருணாமூர்த்தி தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி கல்யாணிபுரத்தில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இந்த பொத்தையில் கரடி, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதன் அருகே கல்யாணிபுரம், மீனாட்சிபுரம், செட்டிகுளம், நீலமேகபுரம் ராஜாங்கபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாடி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை சார்பில் கரடியை பொத்தைக்கு விரட்டுவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் ஹாயாக சுற்றி திரிகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த ராசம்மாள் (70) என்பவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் அருகே புதரில் பதுங்கி இருந்த கரடி அவர் மீது திடீரென பாய்ந்து தாக்கியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டியுள்ளனர். காயமடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை பொறுத்து கூண்டு வைத்து பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். கரடி தாக்கியதில் காயமடைந்த மூதாட்டிக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று வனச்சரகர் கருணாமூர்த்தி தெரிவித்தார்.
The post கடையம் அருகே பரபரப்பு கரடி தாக்கி மூதாட்டி காயம் appeared first on Dinakaran.