*மாணவ, மாணவிகள் படுகாயம்
திருவிடைமருதூர் : தஞ்சாவூர் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியாயினர். இதில் மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில் இயங்கும் தனியார் கல்லூரி பஸ் ஒன்று நேற்று காலை 8.20 மணியளவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் வழியாக கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது முன் பக்க டயர் திடீரென வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பூ ஏற்றி சென்ற மினி லாரி மீது மோதியது.
இதில் கல்லூரி பஸ்சின் முன் பக்கத்தின் உள்ளே மினி லாரி சிக்கிக்கொண்டது. தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து பஸ்சில் சிக்கிக்கொண்ட மினி லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். லாரியிலிருந்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது சமீர் (25), மினி லாரி டிரைவர் சுந்தரபெருமாள் கோவில், மேல வீதியை சேர்ந்த மணி மகன் கார்த்தி (31) ஆகியோரை சடலமாக மீட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் 14 பேர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post தஞ்சாவூர் அருகே மினி லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதி 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.