×
Saravana Stores

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று இரவு முதலே பலத்த சத்தத்துடன் கூடிய இடி மற்றும் மின்னலுடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார். வரும் 18ம் தேதி வரை மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது 10 மணி வரையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipura ,Kanchipuram ,Meteorological Survey Centre ,
× RELATED கடைகளில் அலைமோதிய கூட்டம் காய்கறி,...