- அமைச்சர்
- கே.என் நேரு
- சென்னை
- கிழக்கு
- சென்னை மாநகராட்சி
- ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்
- ஐசிசிசி
- ரிப்பன்
சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) இருந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதைப் பார்வையிட்டு, அங்குள்ள “1913” அழைப்பு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: கடந்த ஆண்டு பெய்த கனமழையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முன்அனுபவத்தின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் கூடுதல் மின்மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 169 நிவாரண மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சமைத்து அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் எந்தெந்த பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அந்தந்தப் பகுதிகளில் உணவு தயார் செய்து உடனடியாக கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 990 இடங்களில் மோட்டார் பம்புகள், 57 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்புசெட்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மழையின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் மோட்டார் பம்புகளுடன் ஜெனரேட்டர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post கடந்த மழையின்போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற மோட்டார்களுடன் ஜெனரேட்டர்களும் தயார்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.