சென்னை: கன்னியாகுமரியை சேர்ந்தவர் சந்துரு. அவரது செல்போனுக்கு, சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சார்பில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில், கீழ்ப்பாக்கம் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமரா மூலம், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, முறையாக வாகன பதிவு எண்கள் இல்லாதது என மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்து, ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதமும், வாகன பதிவு எண் முறையாக இல்லாததற்கு ரூ.1500 அபராதம் என ரூ.2,500 அபராத தொகை கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த சந்துரு, உடனே எஸ்எம்எஸ் அனுப்பிய சென்னை போக்குவரத்து போலீசாருக்கு இ-மெயில் மூலம் எனது பைக் கன்னியாகுமரியில் தான் இருக்கிறது. பல மாதங்களாக பைக் கன்னியாகுமரி மாவட்டத்தை விட்டு வெளியே எடுத்து செல்ல வில்லை என்று விளத்துடன் அனுப்பினர்.
அதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை போக்குவரத்து உயர் அதிகாரிகள் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் திருட்டு பைக்கில் நம்பர் பிளேட் மாற்றி பயன்படுத்திய நபர் குறித்து விசாரணை நடத்த தொடங்கினர். அதன்படி சம்பந்தப்பட்ட பைக்கை கண்டுபிடிக்க கீழ்ப்பாக்கம் போலீசார் 100 சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது, பைக் விருகம்பாக்கம் பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் ைபக்கை பயன்படுத்திய பிரபு என்பரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பிரவு, எனது பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் ஒருவர், அவசரத்திற்கு அவரது பைக்கை தன்னிடம் அடமானம் வைத்து ரூ.50 ஆயிரம் பெற்றதாகவும், அதன் பிறகு அந்த நபர் வீட்டை காலி செய்து சென்றுவிட்டதால் அந்த பைக்கை தான் பயன்படுத்தி வந்ததாகவும் கூறினர்.
பிறகு போலீசார் பிரபு பயன்படுத்திய பைக் சேஸ் மற்றும் இஞ்சின் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, ஆந்திரா மாநிலத்தை ேசர்ந்த சாய் குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. ஆனால் சாய் குமார் தனது பைக், கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது மாயமாகி விட்டதாக கடந்த 2022ம் ஆண்டு கிண்டி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போக்குவரத்து போலீசார் திருட்டு பைக்கில் போலியான பதிவு எண் பயன்படுத்தி விற்பனை செய்த பைக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பைக்கை திருடிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, போக்குவரத்து போலீசார் கிண்டி குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன்படி கிண்டி குற்றப்பிரிவு போலீசார் ஆந்திர வாலிபரிடம் பைக் திருடி போலி பதிவு எண் மாற்றி விற்பனை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் அனுப்பிய எஸ்எம்எஸ் உதவியால் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பைக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கிண்டியில் 2022ம் ஆண்டு திருடப்பட்டது; போலீசாரின் எஸ்எம்எஸ் உதவியால் விலை உயர்ந்த பைக் கண்டுபிடிப்பு: ரூ50 ஆயிரத்திற்கு அடமானம் வாங்கிய நபரிடம் விசாரணை appeared first on Dinakaran.