பொன்னேரி: நந்தியம்பாக்கம் ஊராட்சியில், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரில் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி கொங்கி அம்மன் நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் டாட்டா ரிங் ரோடு பணிகள் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் இக்குடியிருப்பு முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் கழிவு நீரும் கலந்து அக்குடியிருப்பு முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் பொன்னேரி தாசில்தார் உள்பட மாவட்ட ஆட்சியர் வரை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அடுத்து வரும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ், துணைத் தலைவர் கலாவதி மனோகரன், வார்டு உறுப்பினர்கள் வள்ளி, வில்வநாதன், விக்னேஷ், தினேஷ் குமார், சத்தியவாணி உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர்.
The post குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.