சென்னை: டிபன் கடையில் காசு கொடுக்காமல் உணவு சாப்பிட்டு போதையில் தகராறு செய்த நபரிடம், விசாரணை நடத்திய போது, திடீரென காவலரை குத்திய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள டிபன் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் போதையில் உணவு சாப்பிட்டுள்ளார்.
பிறகு சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்காமல் அவர் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். இதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள், போதை வாலிபரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எழும்பூர் காவல் நிலைய காவலர் கரீமிடம் நடந்த சம்பவத்தை கூறி ஓட்டல் உரிமையாளர் வாய் மொழியாக புகார் அளித்தார்.
அதன்படி காவலர் கரீம், போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே காவலரும் அவரை பின்தொடர்ந்து பிடிக்க முயன்றார். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் காவலர் கரீமை குத்திவிட்டு, அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த காவலர் கரீமை, ஓட்டல் ஊழியர்கள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் காவலர் கரீம் அளித்த புகாரின்படி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது, எழும்பூர் பகுதியை சேர்ந்த வெள்ளைசாமி (32) என்றும், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது தெரியவந்தது. உடனே போலீசார் வெள்ளைசாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post புகார் மீது விசாரணை நடத்திய காவலரை கத்தியால் குத்திய போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.