பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரகவுடா ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யகோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஜூன் 8ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னணி கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பின் நீதிமன்ற உத்தரவு பேரில் நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை பவித்ரகவுடா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். மற்ற கைதிகள் வெவ்வேறு சிறையில் உள்ளனர். இதனிடையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரகவுடா ஆகியோர் பெங்களூரு 57வது சிசிஎச் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அம்மனு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் விசாரணை நடந்தது. தர்ஷன் தரப்பில் மூத்த வக்கீல் சி.வி.நாகேஷ் ஆஜராகி வாதம் செய்தார். அப்போது தர்ஷன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதற்கு ஆட்பேசனை தெரிவித்து அரசு வக்கீல் பிரசன்னகுமார் வாதம் செய்தார். இதில் வக்கீல்கள் வாதம் முடிந்ததை தொடர்ந்து. நீதிபதி நேற்று மாலை வழங்கிய தீர்ப்பில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரகவுடா ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாகராஜ், தீபக், ரவிசங்கர், லட்சுமண் ஆகியோரும் ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் தீபக் மற்றும் ரவிசங்கர் ஆகிய இருவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்த நீதிமன்றம் நாகராஜ் மற்றும் லட்சுமண் ஆகியோர் மனுக்களை தள்ளுபடி செய்து தர்ஷன் உள்ளிட்ட குற்றவாளிகளின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டித்தும் உத்தரவிட்டார். இதனிடையில் கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தர்ஷன் தரப்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருவதாக வக்கீல் சி.வி.நாகேஷ் தெரிவித்தார்.
The post ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரகவுடா ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.