வேலூர், அக்.15: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 260 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை தடுக்கவும், அவற்றை சமாளிக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகளில் உள்ளாட்சி, நகராட்சி, தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் தயார் நிலையில் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கும் நபர்களை மீட்க தீயணைப்பு துறையில் 260 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை, வெள்ளம், தீ விபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வேலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 75 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 தீயணைப்பு வீரர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 85 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 260 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் 85 பேர் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்றுள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 5 ரப்பர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு படகில் 8 பேரை அழைத்து வர முடியும். மேலும் தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை முடியும் வரை தீயணைப்பு வீரர்கள் விடுமுறையின்றி பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மழை, வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 260 தீயணைப்பு வீரர்கள் தயார் அதிகாரிகள் தகவல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் appeared first on Dinakaran.