×
Saravana Stores

மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்போரூர்: மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வீராசாமி என்பவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர்மீது வந்த புகார்களின் அடிப்படையில் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த உத்தரவுக்கு தடை பெற்றார்.

இந்நிலையில், துணை தலைவர் உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அதை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டுமென்று செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் அளித்தனர். இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்டலூர் வட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா தலைமையில், கடந்த 9ம் தேதி மாம்பாக்கம் ஊராட்சியின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி 6 வார்டு உறுப்பினர்களும் கைெயழுத்து போட்டனர். இதுகுறித்து, அறிந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, 100க்கும் மேற்பட்டோருடன் வந்து திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் இந்த செயலை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று மாம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன் வந்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் சிவ கலைச்செல்வன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், பொதுமக்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றையும் அவர்கள் வழங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஒன்றிய ஆணையாளர் சிவகலைச்செல்வன் பொதுமக்களின் கோரிக்கை குறித்து கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு
பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Mambakkam panchayat ,Tiruporur ,Tiruporur panchayat union ,Veerasamy ,Tamil Nadu ,Vetri Kazhagam ,Mambakkam Panchayat Council ,Tirupporur Union ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு