சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கழிவுநீர் வதற்காக 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 597 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக உரிமம் பெற்ற 90 கழிவுநீர் ஊர்திகள் பணியமர்த்தப்பட்டு மொத்தம் 687 கழிவுநீரகற்று வாகனங்கள் கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள் தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலுள்ள 1063 பம்புகள் மற்றும் 267 டீசல் ஜெனரேட்டர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கூடுதலாக வாடகைக்கு 102 டீசல் ஜெனரேட்டர்கள் பணியமர்த்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குடிநீர் விநியோக நிலையங்களில் தேவையான அளவு குளோரின் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் மழைநீர் தேங்கினால் மழைநீரினை அகற்ற நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், குடிநீர் வழங்கல்/ கழிவுநீர் அகற்றும் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடு பணிகள் மற்றும் சாலையில் பழுதாகி/ உடைந்துள்ள மேன்ஹோல்கள் மூடிகள் கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
* கட்டுப்பாட்டு அறை
பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916-ல் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென சம்ந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய 687 வாகனங்கள் மூலம் கழிவுநீரகற்றும் பணி: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.