×
Saravana Stores

கார்கே மீதான குற்றச்சாட்டால் வக்பு மசோதா ஆய்வு கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

புதுடெல்லி: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்கழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில், கர்நாடகா மாநில சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் கர்நாடகா சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவரும், அம்மாநில பாஜ முன்னாள் துணைத்தலைவருமான அன்வர் மணிப்பாடி, கர்நாடகாவில் வக்பு சொத்துக்களை அபகரிப்பதில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ரஹ்மான் கான் உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் கமிட்டியின் தலைவரான பாஜ எம்பி ஜகதாம்பிகா பால், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணைகளை நிராகரித்து, அன்வர் மணிப்பாடி தொடர்ந்து பேச அனுமதித்தார்.

இவ்விவகாரங்களால் காங்கிரசின் கவுரவ் கோகோய், இம்ரான் மசூத், திமுகவின் ஆ.ராஜா, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி, சமாஜ்வாடியின் மொஹிப்புல்லா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

The post கார்கே மீதான குற்றச்சாட்டால் வக்பு மசோதா ஆய்வு கூட்டம் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Waqf ,Kharge ,New Delhi ,Lok Sabha ,Delhi ,Karnataka State Minority Commission ,Karnataka Minority Development Corporation ,
× RELATED வக்பு மசோதா ஆய்வு கூட்டத்தில் பாஜ,...