திருச்சி: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழக உள்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் 4வது நாளாக மழை தொடர்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் பகுதியில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. திருவாரூரில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதியிலும் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. தஞ்சையில் 6வது நாளாக நேற்றிரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
பின்னர் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் மழை தூறியது. பாபநாசம் பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டார பகுதியான கோவிலடி, கல்லணை, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதேபோல் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியிலும் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது. இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
பெரம்பலூர் நகரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர் பகுதியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் துறையூர், தா.பேட்டை, முசிறி, துவரங்குறிச்சி, மணப்பாறை, லால்குடி, துவாக்குடி, திருவெறும்பூர் பகுதியில் நேற்று மாலை 2 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் மழை தூறியது. திருச்சி மாநகரில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
வீடு இடிந்து சேதம்: தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அடுத்த கொத்தங்குடியில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தொழிலாளி ஆனந்தராஜ் என்பவர் மனைவி, குழந்ைதகளுடன் நேற்று முன்தினம் இரவு தூங்கினார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நேற்று வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆனந்தராஜ் குடும்பத்தினர் தப்பினர். டெல்டாவில் ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சம்பா சாகுபடிக்கு தற்போது பெய்து வரும் மழை பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
The post வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; டெல்டாவில் விடிய விடிய மழை: தஞ்சை அருகே வீடு இடிந்து சேதம் appeared first on Dinakaran.