சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா நடக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டை, கொள்கைத் திருவிழா வாகக் கொண்டாடும் வகையில், திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான..!’ என்ற பெயரில் பேச்சுப் போட்டி மாநிலம் தழுவிய போட்டியாக நடைபெற்று வருகிறது. சென்னை மண்டலத்துக்கான போட்டி அன்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியாளர்களை வாழ்த்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, நம் முதல்வர் இளைஞர் அணிக்கு மூன்று பொறுப்புகள் கொடுத்தார். அதில் மிகமிக முக்கியமான பொறுப்புதான் இந்தப் பேச்சுப்போட்டி. தேர்தல் நேரம், மற்ற பணிகளால் போட்டியை நடத்தி முடிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று, நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட 17 ஆயிரம் பேர் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பித்தார்கள். ஏதோ இரண்டு நாள், ஒரு வாரத்தில் முடித்து விடாமல், முதல் சுற்றில் தேர்வானவர்களுக்கு பயிற்சி கொடுத்து, ஒவ்வொரு 20 பேருக்கும் ஒரு பயிற்சியாளரை நியமித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என அறிவித்தோம். கலந்துகொண்ட அனைவருக்கும் அதாவது 17 ஆயிரம் பேருக்கும் பரிசு கொடுக்க எனக்கு ஆசைதான். இருந்தாலும், பரிசு கொடுக்க முடியாது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை எப்படி இருக்கிறதோ அதேபோல்தான் இளைஞர் அணி நிதி நிலைமையும் இருக்கிறது. அதனால், அடுத்த முறை இந்தப் பரிசுத்தொகை இன்னும் அதிகப்படுத்தப்படும். உங்களின் ஆர்வம் எங்களை எல்லாம் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. சில பேர் பேசும்போது கொஞ்சம் தயங்கினீர்கள், நானும் அதைப்போலத்தான். எனக்கு மைக் கொடுத்து மக்களிடம் பேசச் சொன்னீர்கள் என்றால், ஜாலியாக சரளமாக பேசிவிடுவேன். எனக்கு எதுகை, மோனையுடன் எல்லாம் பேசத் தெரியாது.
இப்போது கடைசியாக ஒரு தம்பி பேசினார், அது மாதிரி எல்லாம் என்னால் பேசவே முடியாது. சுட்டுப்போட்டாலும் எனக்கு வராது. நானெல்லாம் மனதுக்கு தோன்றுவதை மனதில் இருப்பதைப் பேசுவேன். உண்மையைப் பேசுவேன். திமுகவின் கொள்கையை பேசுவேன். நம் முதல்வரின் திட்டங்களைப் பற்றி பேசுவேன். இன்னும் சொல்லப்போனால், கலைஞர் முன் பேச எனக்கு இரண்டு, மூன்று வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. 10, 12 வருடத்திற்கு முன்பு, ஒரு திருமண நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது. பேசும்போது வியர்த்துக் கொட்டியது. இப்போதும் கூட முதல்வரின் முன்பு பேசுவதற்குப் பயப்படுவேன். எப்போது பேச்சை முடித்துவிட்டு, போவோம் என்று இருக்கும். இங்கு வந்து பங்கேற்று இருக்கின்ற அனைவரும் வெற்றிப் பெற்றவர்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவின் எதிர்காலமே நீங்கள்தான். உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். திமுக பேசி, எழுதி, படித்து வளர்ந்த இயக்கம். அந்தத் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகின்ற 19ம் தேதி இந்தப் போட்டிக்கான இறுதிப் போட்டியும், 20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகளால் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பேச்சாளர்களுக்கான பரிசும் வழங்கப்பட இருக்கிறது. எனவே, உங்களை எல்லாம் மீண்டும் இறுதிப்போட்டியில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சு போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.