×

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் 2 மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை

*குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது

*தூக்கத்தை தொலைத்த பொதுமக்கள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் காட்டாற்றுநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டனர்.புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு நேரத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கன மழை இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் புதுக்கோட்டையே வெள்ளக்காடாக மாறியது.

குறிப்பாக புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் இடையப்பட்டி பகுதியில் இருந்து வந்த காட்டாற்று நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றது.

இதேபோல் வடக்கு நான்காம் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் அவ்வழியாகச் சென்ற ஆட்டோ மாட்டிக்கொண்டதில் ஆட்டோவில் பயணித்த கைக்குழந்தை உள்ளிட்ட பெண்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் வரத்து வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு குடியிருக்க கூடியபொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதனை எடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரத்து கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் காமராஜபுரம் பகுதியிலும் வெள்ள நீர் பல வீடுகளில் உட்பகுத நிலையில் காமராஜபுரம் 21ம் வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் எடிந்த வீட்டில் இரவு நேரத்தில் உறங்க கூட முடியாமல் அங்கு வசிக்கக்கூடிய நபர்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்தனர். இதேபோல் உசிலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் சாலைகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் புதுக்கோட்டையை தண்ணீரில் மிதக்கக்கூடிய நிலையில் கொட்டும் மழையிலும் மாநகராட்சி ஊழியர்கள் அலுவலர்கள் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடிப்பதற்கும் வரத்து கால்வாய் அடைத்துள்ள பகுதிகளில் வரத்து கால்வாயை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரியும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் வரத்து கால்வாயை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் புதுக்குளம் மராமத்து பணிகள் நடைபெறுவதால் அதற்கு செல்லக்கூடிய வரத்து கால்வாயை அடைத்து வைத்து புதுகுளத்திற்கு நீர் செல்ல முடியாமல் தடுத்துள்ளதால் இதுவரை மழை நீரை சூழாத பகுதியில் கூட தற்போது ஒரு மணி நேரம் மழைக்கே மழை நீர் சூழ்ந்து வருவதாகவும் அதனால் அந்த வரத்து கால்வாயை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மழை நீர் சூழ்ந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் மழையால் சுவர் இடிந்து சேதம் அடைந்த வீடுகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் 2 மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Pudukottai Municipal Corporation ,Pudukottai ,Pudukottai Corporation ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்பு