×
Saravana Stores

தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை, கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதி, கவியருவிக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால், வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களின் போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

பள்ளி விடுமுறை நிறைவடைந்ததும், கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி சரஸ்வதி பூஜை, நேற்று முன்தினம் விஜயதசமி நேற்று ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தது.ஆழியார் அணை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்தனர்.

அவ்வப்போது சாரலுடன் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருப்பதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அணையில் ரம்மியமாக உள்ள தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களில் ஆழியார் அணைக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆழியார் அணை மற்றும் பூங்காவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கும் ஆர்வமுடன் சென்றனர். இதில், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டுவதால் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.நேற்று காலையில் குறிப்பிட்ட நேரம் திடீர் வெள்ளப்பெருக்கால் அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் சகஜநிலையானது. நேற்று கவியருவியில் குளிக்க வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம் வந்திருந்தனர்.

சரஸ்வதி பூஜை விடுமுறையையொட்டி கவியிருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களிலர் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை வால்பாறை மலைப்பாதையில் நிறுத்தியதால் வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை, கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Aliyar Dam ,Kaviaruvi ,Valparai-Pollachi ,Pollachi ,Valparai-Pollachi road ,Coimbatore ,Dinakaran ,
× RELATED 75 நாட்களுக்கு மேலாக ஆழியார் அணை நீர்...