×

அருமனை அரசு பள்ளி சுற்றுச் சுவரில் ஓட்டை

*வகுப்புகளை கட் அடித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள்

அருமனை : அருமனை அரசு உயர்நிலைப்பள்ளி காம்பவுண்ட் சுவரில் உள்ள ஓட்டையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அருமனை அருகே நெடியர் சாலை பகுதியில் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒழுங்காக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மத்தியில் சில குறும்புக்கார மாணவர்கள் பள்ளியை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவது வழக்கம்தான்.

ஆனால் பள்ளிக்கு வந்துவிட்டால் கேட்டை இழுத்து மூடிவிடுவார்களே என நினைக்கலாம். மாணவர்கள் சற்று ஒருபடி மேல் யோசித்து அதற்கு விபரீதமான வழியை கண்டு பிடித்துவிட்டதுதான் சோகத்திலும் சோகம். இந்த பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுமார் 6 அடி உயர காம்பவுண்ட் சுவர் உள்ளது. இது மிகவும் பழமையானது என்பதால் குறும்புக்கார மாணவர்கள் சுவரில் இருந்த ஒவ்வொரு செங்கலாக பிரித்து எடுத்து ஒரு ஆள் நுழையும் வகையில் ஓட்டையை போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதனருகே சாலை செல்வதால் அதில் செல்லும் மக்களின் மீது எந்நேரமும் இந்த காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, அவசர கதியில் வகுப்புக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இந்த ஓட்டை வழியாக எஸ்கேப் ஆகும் மாணவர்களின் தலையில் ஒரு குட்டு குட்டிவிடவும் வாய்ப்புள்ளது.இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே இருந்து வெளியே வர உதவிய ஓட்டை, இரவில் மதுப்பிரியர்கள் பள்ளிக்குள் நுழைந்து மது அருந்தவும் உதவுவதுதான் வேதனை. இரவு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இங்குவரும் குடிமகன்கள் நன்றாக குடித்துவிட்டு மதுபாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே வீசி செல்கின்றனர்.

இது முகம் சுளிக்க வைக்கிறது. அதேபோல் இந்த காம்பவுண்டு சுவரையொட்டி கழிவறை இருப்பதால் அதிக துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி அருகே மருத்துவமனை இருப்பதால் கழிவுநீர் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.எனவே இந்த காம்பவுண்டு சுவரை விரைவில் சீரமைத்து மாணவர்களின் நலனை பாதுகாப்பதோடு, குடிமகன்களின் சேட்டைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post அருமனை அரசு பள்ளி சுற்றுச் சுவரில் ஓட்டை appeared first on Dinakaran.

Tags : Municipal ,Government School ,Arumani ,Arumani Government High School ,Arumanai Government Higher Secondary School ,Nedyar Road ,Arumanai ,Arumanai Govt. School ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு...