×
Saravana Stores

பள்ளிக்கு லேட் ஆகிறது… ப்ளீஸ்… மேம்பாலத்தை விரைந்து சரி செய்யுங்கள்

* கலெக்டருக்கு தபாலில் கோரிக்கை விடுத்த மாணவி

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்வதில் காலதாமதம் ஆவதாகவும், அந்த பாலத்தை விரைவில் சீரமைக்குமாறும் பள்ளி மாணவி ஒருவர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து தபால் அனுப்பியுள்ளார்.நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எண்.47ல், மார்த்தாண்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை குறைக்கும் நோக்கத்தில் குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் பகுதி வரை 2.5 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.222 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் முறையாக சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. பல போராட்டங்களுக்கு பிறகு பாலம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி இந்த பாலத்தில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லுகின்ற சாலையில் உடைப்பு ஏற்பட்டு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது.தற்போது இந்த பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலத்தின் கீழ்பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணிகள் தாமதமாவதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாக பள்ளிக்கூடம் செல்லும் 6ம் வகுப்பு மாணவி ஒருவர் கலெக்டர் அழகுமீனாவுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அந்த மாணவி தனது மழலைக்குரலில் பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் மாணவி பேசியதாவது:

வணக்கம் கலெக்டர் அம்மா. நான் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் தினமும் பள்ளிக்கூட வேனில் ஏறி மார்த்தாண்டம் பாலம் வழியாகத்தான் பள்ளிக்கூடம் செல்வேன். தற்போது பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் கீழ்பகுதி வழியாகத்தான் வாகனங்கள் செல்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளிக்கு லேட்டாக தான் செல்கிறேன். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வேன் தள்ளாடி செல்லும். ரொம்ப நேரம் ஆவதால் சோர்வாகவே உள்ளது.

அப்படியே வகுப்புக்கும் செல்வதால் தூக்கம் தூக்கமா வருது… பாடத்தை எப்படி கவனிப்பேன்?. எனக்கு மட்டுமில்ல. வேனில் என் கூட வரும் நண்பர்களும் தூங்கி விடுவார்கள். அவர்கள் வேனிலும் தூங்குகின்றனர். வகுப்பறைக்கு சென்று அங்கேயும் தூங்குகின்றனர். நாங்க ரொம்ப சின்ன பசங்க. ப்ளீஸ் மேடம். பழுதடைந்த மேம்பாலத்தை விரைந்து சரி செய்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுங்கள் என அந்த வீடியோவில் மாணவி கூறியுள்ளார்.

The post பள்ளிக்கு லேட் ஆகிறது… ப்ளீஸ்… மேம்பாலத்தை விரைந்து சரி செய்யுங்கள் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Marthandam bridge ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் அருகே மது போதையில்...