டெக்சாஸ்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையை மீறி விண்வெளிக்கு ராக்கெட் செல்வது அதிசயம் என்றால், ஈர்ப்பு விசையை மீறி விபத்து நிகழாமல் பூமியில் ராக்கெட் பத்திரமாக தரையிறங்குவதும் அதிசயம் தான். அப்படி ஒரு அதிசயத்தை தான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிகழ்த்தி காட்டியுள்ளது.
40 மாடி கட்டடம் உயரம் கொண்ட ஸ்டார் ஷிப் ராக்கெட் ஏவுதளத்தில் துல்லியமாக தரையிறங்கிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மந்திரங்களையும், மாயாஜாலங்களையும் பொறியியல் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பது எலான் மஸ்கின் பிரபலமான சொற்றொடர். அந்த சொற்றொடருகான சான்றை அவரின் நிறுவனமே தற்போது நிகழ்த்தி காட்டியுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படும் ராக்கெட்களுக்கு மாற்றாக மறு பயன்பாட்டு ராக்கெட் தொழில் நுட்பத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக முதலீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒரு திட்டம் தான் ஸ்டார்ஷிப். அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி பின்னர் பூமியில் பத்திரமாக மீண்டும் தரையிறங்க வைப்பது தான் இந்த திட்டம். ஸ்டார்ஷிப் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ராக்கெட்டின் 5வது சோதனை இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் போகோ சிகா கடற்கரைக்கு அருகே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 400 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட் செலுத்தப்பட்ட இடத்தில் துல்லியமாக வந்து இறங்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. ராக்கெட் துல்லியமாக தரையிறங்கியதும் அதனை ஏவுதளம் பற்றி பிடித்தது பொறியியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டின் மொத்த எடை 5,000 மெட்ரிக் டன் என கூறப்படுகிறது. சூப்பர் ஹெவி பூஸ்டர் எனப்படும் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். ஸ்டார்ஷிப் திட்றடத்தின் மூலமாக ராக்கெட் தொழில்நுட்பத்தின் புதிய திறன்களை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்.. மீண்டும் பூமிக்கு திருப்பிய ராக்கெட்டை கச்சிதமாக கேட்ச் செய்தது ஏவுதளம்..!! appeared first on Dinakaran.