களக்காடு, அக்.14: களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு 10 அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோயில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 15ம் ஆண்டு தசரா திருக்காட்சி நேற்று முன்தினம் கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் சுவாமிகள் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.
இதனைதொடர்ந்து சந்திரசேகர சுவாமிகள், உப்பாற்றாங்கரையில் பரிவேட்டையாடினார். பின்னர் இரவில் களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன், மேலரதவீதி கற்பகவல்லி அம்மன், கோவில்பத்து துர்க்கா பரமேஸ்வரி அம்மன், கோவில்பத்து முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி முக்கு முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன் கோயில்களில் இருந்து வந்த 10 அம்மன் சப்பரங்களும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் முன்பு ஒரே இடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். இவர்களுடன் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள், வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகளும் திருக்காட்சி கொடுத்தனர்.
முன்னதாக கற்பகவள்ளி அம்மன் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்தார். அம்மன்கள் எழுந்தருளிய வாகனங்கள் சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்தன. அம்மன்களுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் வரதராஜபெருமாள், சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள், மற்றும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. விழாவில் களக்காடு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருக்காட்சிக்கு பின்னர் அம்மன் சப்பரங்கள் ரதவீதிகளில் அணிவகுத்தவாறு மேளதாளங்கள் முழங்க தங்களது கோயிலுக்கு திரும்பியது. பக்தர்கள் அம்மன்களுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
The post களக்காட்டில் தசரா திருவிழா கோலாகலம்: 10 அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி appeared first on Dinakaran.