×
Saravana Stores

சல்மான் கான், தாவூத் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்?விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சல்மான் கான், தாவூத் கும்பலுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததே கொலைக்கு காரணம் என விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பாபா சித்திக். துவக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இவரது மகன் ஜீஷன் சித்திக், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ. பாந்த்ராவில் உள்ள கெர் நகரில் இவரது அலுவலகம் உள்ளது.

பாபா சித்திக், பாந்த்ரா மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் 1999, 2004 மற்றும் 2009 என 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்வானவர். விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான அமைச்சரவையில் 2004 முதல் 2008 வரை உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சராகவும், தொழிலாளர் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில், மகனின் எம்எல்ஏ அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இரவு 9.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கு நின்றிருந்த சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டு விட்டு தப்பினர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் பாபா சித்திக்கை அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக, இரவு 11.27 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாபா சித்திக்கிற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தபோதும் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பாபா சித்திக்கின் உடல் நேற்று காலை 6 மணிக்கு விலே பார்லேயில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், மெரைன்லைனில் உள்ள முஸ்லிம்களின் அடக்கஸ்தலமான கபரஸ்தானில், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக, அரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23), உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேன் காஷ்யப் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, விசாரணையில் உதவுவதற்காக மும்பை வந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதான 2 பேரும் மும்பை எஸ்பிளனேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜிடி மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் இருவரிடமும் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். அதில், குர்மாயில் சிங்கிடம் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

ஆனால், தர்மராஜ் காஷ்யப்பிடம் விசாரிக்க கோர்ட் அனுமதி தரவில்லை. அவருக்கு வயது பரிசோதனை நடத்தி சமர்ப்பிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், இது மிகவும் துரதிருஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது என்றார். இந்த சம்பவம் மிகவும் துயரமானது என தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, யாரும், எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இந்த வழக்கை விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம் மற்றும் அனுஜ் தபன் ஆகியோருடன் பாபா சித்திக் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். இதன் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக பிஷ்னோய் கும்பலின் பேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது. மேலும் அந்த பதிவில், ‘ஓம், ஜெய் ராம், ஜெய் பாரத். நான் வாழ்க்கையின் சாரத்தைப் புரிந்துகொள்கிறேன், செல்வத்தையும் உடலையும் தூசியாக கருதுகிறேன். நட்பின் கடமையை மதித்து, சரியானதை மட்டுமே செய்தேன். சல்மான் கான், நாங்கள் இந்த போரை விரும்பவில்லை, ஆனால், நீங்கள் எங்கள் சகோதரரின் உயிரை இழக்கச் செய்தீர்கள்.

பாலிவுட், அரசியல் மற்றும் சொத்து விவகாரங்களில் தாவூத் மற்றும் அனுஜ் தபனுடன் அவருக்கு இருந்த தொடர்புதான் அவரது மரணத்திற்கு காரணம். எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை. சல்மான் கானுக்கோ அல்லது தாவூத் கும்பலுக்கோ யார் உதவினாலும், அவர்கள் தயாராக இருக்க வேண்டும். எங்கள் சகோதரர்களில் யாரையாவது கொலை செய்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா படுகொலையிலும் தொடர்புள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி கோல்டி பிரார் அமெரிக்கா மற்றும் கனடாவில் பதுங்கி இருக்கிறார். இருவரும் சேர்ந்துதான் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துகின்றனர். லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால் 1998ம் ஆண்டு சல்மான் கான் ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹை படப்பிடிப்புக்கு சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

அந்த வழக்குகளில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதில் இருந்து வெளியில் வந்த பிறகும், மான் வேட்டை விவகாரம் சல்மான் கானை விடவில்லை. சல்மான் கான் வேட்டையாடிய மான்களை பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக சல்மான் கானுக்கு தொடர் மிரட்டல் வந்து கொண்டுள்ளது. சமீபத்தில் கூட, சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சல்மான் கானுடனான தொடர்பும் பாபா சித்திக் கொலைக்கு காரணம் என்பதால், அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சித்திக் வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* உயிரைக் குடித்த 9.9 மி.மீ பிஸ்டல்

பாபா சித்திக் உடலில் பாய்ந்திருந்த குண்டை ஆய்வு செய்தபோது, அவரை கொல்லப் பயன்படுத்தியது 9.9 மி.மீ துப்பாக்கி என தெரிய வந்தது. அவர் மீது கொலையாளிகள் துப்பாக்கியால் 4 முதல் 5 ரவுண்டு சுட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

* 15 நாட்கள் முன்பே வந்த மிரட்டல்

பாபா சித்திக்கிற்கு 15 நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வந்ததாகவும், இதன்பிறகே அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிஷ்னோய் கும்பலிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் வந்ததாக சித்திக் கூறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

* ரூ.50,000 கூலி

பாபா சித்திக்கை கொலை செய்தவர்கள், ஏற்கனவே இதற்கான திட்டத்தை தீட்டி 2 மாதங்களாக கண்காணித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகள் 3 பேருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் கூரியர் மூலம் ஆயுதங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மூவருக்கும் தலா ரூ.50,000 கூலி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி முதல், 3 பேரும் குர்லாவில் ஒரு வீட்டை ரூ.14,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பாபா சித்திக்கை நோட்டம் விட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் பஞ்சாப்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

* சட்டம் ஒழுங்கு மோசம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சித்திக் கொலை குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிராவில் உள்ள மகாயுதி அரசு தனது கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், அச்சத்தில் வாழும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா அரசு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’’ என்றார். ‘‘பாபா சித்திக் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த கொடூரமான சம்பவம் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததை அம்பலப்படுத்துகிறது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அரசு தனது தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால், மும்பை மக்களை எப்படி பாதுகாப்பார்கள்?’’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தசரா பட்டாசு சத்தத்தில் கரைந்த துப்பாக்கி சத்தம்

பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தசரா கொண்டாட்டங்கள், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. நகரமே விழா கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. அப்பகுதியில் தசராவுக்காக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. இதனால், துப்பாக்கிச் சூடு சத்தம் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு கேட்கவில்லை என போலீசார் கூறினர்.

The post சல்மான் கான், தாவூத் கும்பலுடன் தொடர்பு வைத்ததே மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கொலைக்கு காரணம்?விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Dawood ,Maharashtra ,Lawrence Bishnoi ,Mumbai ,minister ,NCP ,Ajit Pawar ,Baba Siddiqui ,Lawrence Bishnoi Gang ,Dinakaran ,
× RELATED பணம் பறிக்கவே கொலை மிரட்டல் வருகிறது;...