டாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக தந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வங்கதேசம் சுற்றுப்பயணம் சென்ற போது, அங்கு சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஜெசோரேஸ்வரி காளி கோயிலுக்கு தங்க கிரீடத்தை பரிசாக வழங்கினார். அந்த கிரீடம் காளிக்கு சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கிரீடம் மாயமானது. தனியார் செய்தி சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றில், கோயிலில் யாருமில்லாத சமயத்தில் வெள்ளை நிற டிசர்ட், ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்து, காளியின் தங்க கிரீடத்தை எடுத்துச் செல்வது காட்டப்பட்டுள்ளது.
அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து சத்கிரா மாவட்ட போலீஸ் எஸ்பி மோனிருல் இஸ்லாம் கூறுகையில், ‘‘இந்த திருட்டு பிற்பகல் 2.47 மணியில் இருந்து 2.50 மணிக்குள் நடந்திருக்கிறது. வழக்கமாக பூசாரி பிற்பகல் பூஜையை முடித்து விட்டு வெளியில் சென்ற பிறகு மர்ம நபர் கிரீடத்தை திருடி உள்ளான். சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த வாலிபரை தேடி வருகிறோம்’’ என்றார். தற்போது துர்கா பூஜை நடந்து வரும் நிலையில், அனைத்து கோயில்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் இந்த திருட்டு சம்பவம் வங்கதேச இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், கிரீடத்தை மீட்டெடுக்கவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* துர்கா பூஜையை சீர்குலைக்க சதி?
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள், நவராத்திரியை முன்னிட்டு வழிபடும் துர்கா பூஜையை சீர்குலைக்க தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஜெசோரேஷ்வரி காளி கோயில் கிரீடம் திருடு போனதோடு, தான்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இதில் பந்தல் எரிந்து தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் கூறி வலியுறுத்தி உள்ளது.
The post வங்கதேச காளி கோயிலில் பிரதமர் மோடி பரிசாக தந்த தங்க கிரீடம் திருட்டு: இந்தியா கவலை appeared first on Dinakaran.