×

விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டம் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிய துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*தேசிய ஆணைய தலைவர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிய துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஆணை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரியப்பணிகள் மற்றும் மறுவாழ்வுப்பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் பேசுகையில், விழுப்புரம் மாவட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் மாநில காப்பீட்டுத் திட்டம், தூய்மை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் பராமரிப்பு முகவர்கள், தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகள், மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்ட தலைவர்கள், தற்காலிக மற்றும் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு வசதிகள், அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, கடனுதவி குறித்தும் கேட்டறியப்பட்டது.

தூய்மை பணியாளர்களின் பிடித்த தொகை முழுமையாக பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து அதற்கான பதிவு எண், உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் காப்பீடு போன்றவை முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது. நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தினை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்திடவும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தினை ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்திடவும், தூய்மை பணியாளர்களின் பணிக்குத் தேவையான தரமான சீருடைகள், கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை தொடர்ச்சியாகவும், சரிவர வழங்கிட வேண்டும்.

இதனை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முறைகள், பணி ஓய்வுக்குரிய பணபலன்கள் காலதாமதமின்றி வழங்கிடவும், அவர்கள் வசித்து வரும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்திடவும், பணியின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் பணிபுரிய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post விழுப்புரத்தில் ஆய்வுக்கூட்டம் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிய துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,National Commission ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே வீட்டு வேலை...