திருப்புவனம் : திருப்புவனம் அருகே கழுவன்குளத்தில் பழமையான எழுத்துக்கள் பொறித்த கல்தூண் உள்ளதாக, கழுவன்குளத்தை சேர்ந்த நாசியா கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் கோபி மற்றும் சதீஷ்பாண்டி ஆகியோர் கண்டறிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தர்மராஜா அக்கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன் மற்றும் சரஸ்வதி நாராயணன் கல்லூரி உதவி பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தர் ஆகியோர் கொண்ட குழு கழுவன்குளம் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு நீர் பாசன தேவைக்கு மடை அமைத்துக் கொடுத்தது தொடர்பான கல்வெட்டு என்பது தெரிய வந்தது. கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது,‘‘நம் முன்னோர்கள் விவசாயத்தில் பண்பட்டவர்களாக திகழ்ந்தனர் என்பதை அறிவிக்கும் விதமான தூண்களே இந்த குமிழித்தூண்கள். இதன் மூலம் எளிதாக விவசாய நிலத்திற்கு நீரை பாய்ச்சி விவசாய நிலத்தை வளப்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த இந்த தூணும் அதனையே நினைவு படுத்துவதாக உள்ளது.
கழுவன்குளத்தின் கண்மாயில் காணப்படும் இத்தூணியில் 12 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பிள்ளையார் சுழி தொடக்கமாக இட்டு ‘‘சாலிவாகன சகாப்தம் தமிழ் எண் குறித்த ஆண்டு 2735 என்றும், விரோத கிருது ஆண்டு ஆனி மாதம் கழுவன் குளத்தின் நாட்டாண்மை இருளக்கோன் புத்திரன் முத்துக்கருப்ப சேருவைக்காரன் சேவிச்ச மடை” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன்படி இக்கல்வெட்டானது 1894ம் ஆண்டு கழுவன்குளம் கிராமத்திற்கு நீர்ப்பாசன வசதிக்கு மடை அமைத்த செய்தியை அறிய முடிகிறது.
மேலும் இத்தூணில் ஒரு ஆண் உருவம் கையில் அரிவாள் ஏந்தியும் இடது கையில் கதையாயுதம் கீழ் ஊன்றியபடியும் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இத்தூண் அருகே ஒரு சூலக் கல்லும் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தனர்.
The post திருப்புவனம் அருகே கண்மாயில் குமிழித்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.