தஞ்சாவூர், அக். 10: தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில் உள்ள மலர் வணிக வளாக நுழைவாயிலில் ஏராளமான பூக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த கழிவுகள் அகற்றப்படாததால் அந்தப் பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் உடனே அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில் மலர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த பகுதியில் திருச்சி திண்டுக்கல் சேலம் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் மொத்தமாக கொண்டு வரப்படும்.
அங்கு கொண்டு பூக்களை மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் பூக்களின் விற்பனை முடிந்த பிறகு அங்கு உள்ள பூக்களின் கழிவுகளை அந்த வணிக வளாகத்தின் நுழைவாயிலில் கொட்டுவது வழக்கம். அதனை தஞ்சை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு கொட்டப்படும் பூக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்படாமல் உள்ளது. எனவே பூக்கழிவு அங்கு ஒட்டப்பட்டு இருப்பதால் கொசுக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் கடந்த மூன்று தினங்களாக தஞ்சாவூரில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் அங்கு கொட்டப்பட்டுள்ள பூக்கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில் பூக்கழிவுகள் கொட்டப்படுவதால் கொசுத்தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.