×
Saravana Stores

அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் நடப்பு ஆண்டு 600 ஜோடிகளுக்கு இலவச திருமணம் வேலூரில் வரும் 21ம் தேதி 10 ஜோடிகளுக்கு நடக்கிறது இந்து அறநிலையத்துறை சார்பில்

வேலூர், அக்.10: தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 600 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. வேலூர் தாரகேஸ்வரர் கோயிலில் வரும் 21ம் தேதி 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படுகிறது. தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இத்திருமணத்தில் ஜோடி ஒன்றுக்கு 4 கிராம் தங்கம், சீர்வரிசை பொருட்கள் உட்பட மொத்தம் ₹60 ஆயிரம் நிதியாக ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மொத்தம் 600 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இணை ஆணையர் மண்டலம் ஒன்றுக்கு 30 ஜோடிகள் வீதம் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இத்திருமண நிகழ்வு, முதல்கட்டமாக 21ம் தேதி 200 ஜோடிகளுக்கு நடத்தப்படுகிறது.

வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் முதல்கட்டமாக வேலூர் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் வரும் 21ம் தேதி காலை 10 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. எனவே, வறுமையில் உழவும் ஏழைப்பெண்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வேலூர் ஆற்காடு சாலை காகிதப்பட்டறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் மற்றும் வேலூர் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில், புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் என முக்கிய கோயில்களில் கிடைக்கும். இதையடுத்து 2ம் மற்றும் 3ம் கட்டங்களாக வேலூர் இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருத்தணி, திருவேற்காடு கோயில்களில் இலவச திருமண நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் நடப்பு ஆண்டு 600 ஜோடிகளுக்கு இலவச திருமணம் வேலூரில் வரும் 21ம் தேதி 10 ஜோடிகளுக்கு நடக்கிறது இந்து அறநிலையத்துறை சார்பில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Hindu Charity Department ,Tamil Nadu Hindu Charity Department ,Vellore Tarakeswarar temple ,Hindu Charities Department ,
× RELATED காஞ்சிபுரம், குன்றத்தூர்,...