×
Saravana Stores

அரியானாவில் வாக்கு எண்ணும் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜூடன் இருந்தது எப்படி?: தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் காங். புகார்

புதுடெல்லி: அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த முரண்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் அதிகாரிகள் பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அரியானா தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் உயர்மட்ட குழு நேரில் புகாரளிக்க அனுமதி கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், பவன் கேரா, அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் கொண்ட உயர்மட்ட குழுவினர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதன் பின் பூபிந்தர் சிங் ஹூடா, பவன் கேரா உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்கு இயந்திரங்கள் 60 அல்லது 70 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருப்பது வழக்கம். நாள் முழுவதும் வாக்குப்பதிவு நடக்கும் போது சார்ஜ் குறையும். பின்னர் அவை சீலிடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவு நாளில் மட்டுமே வெளியில் கொண்டு வரப்படும். அப்படி இருக்கையில், அரியானாவில் சில மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99 சதவீத பேட்டரி சார்ஜூடன் இருந்துள்ளன. இதுதொடர்பாக 7 தொகுதிகளில் இருந்து எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து 20 புகார்கள் வந்துள்ளன.

இதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளோம். கூடுதல் ஆதாரங்களை அடுத்த 48 மணி நேரத்தில் சமர்பிப்பதாக கூறி உள்ளோம். இந்த வெளிப்படையான முறைகேடு தேர்தல் முடிவையே மாற்றக் கூடியது. எனவே இது தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு கூறி உள்ளனர்.

* தேர்தல் ஆணையம் கடும் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று எழுதிய கடிதத்தில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் அரியானா மாநில தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என பேசி உள்ளனர். இத்தகைய பேச்சுக்கள் மக்களின் விருப்பத்தை ஜனநாயகமற்ற முறையில் நிராகரிப்பதாக உள்ளது. இவை பேச்சு சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை. இதுபோன்ற கருத்துக்கள் ஜனநாயக அமைப்பில் கேட்கப்படாதவை. நாடு முழுவதும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான சட்டப்பூர்வ நடைமுறை அரியானா, ஜம்மு காஷ்மீரிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது’’ என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டித்துள்ளது.

The post அரியானாவில் வாக்கு எண்ணும் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜூடன் இருந்தது எப்படி?: தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் காங். புகார் appeared first on Dinakaran.

Tags : Congress ,EC ,NEW DELHI ,Election Commission ,Haryana ,BJP ,Aryana ,Dinakaran ,
× RELATED மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வேண்டும்: காங். கருத்து