×
Saravana Stores

சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி: விமானம், ஹெலிகாப்டர், உதிரிபாகங்கள் தயாரிப்பு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது. ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க இருப்பது கோவை தொழில் துறையினர் இடையே வரவேற்பு பெற்று உள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து சுமார் 350 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம் 420 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழில் பூங்கா அமைய உள்ளது. புதிதாக அமைக்கப்படும் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பூங்காவில் இந்திய விமானப் படைக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், விமானங்கள், விமான போர்ப்படை கருவிகள், விமான உதிரி பாகங்கள் என அனைத்து வகை விமானம் தொடர்பான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தங்களது பங்கை அளித்து வருகின்றன. அந்த வகையில் ராணுவ தளவாடங்களுடன் சேர்த்து விமானம், ஹெலிகாப்டர் போன்றவை தயாரிக்கும்போது கோவையில் மேலும் அதிக அளவிலான தொழில் கூடங்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும். இப்படியொரு தொழில் பூங்கா அமைவதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலதிபர்கள் கோவைக்கு வந்து தங்களது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட தொடங்கி விட்டனர்.

விமானங்கள் தயாரிக்கும் பணி இங்கு தொடங்கினால் இந்திய பாதுகாப்புத்துறை வரும் ஆண்டுகளில் பயன்படுத்த உள்ள தளவாடங்கள் உற்பத்தியில் கோவை மாவட்டம் இந்திய அளவில் சிறந்த தயாரிப்புகளை வழங்கும் சூழல் ஏற்படும். ராணுவ தொழில் பூங்காவில் ராணுவ தளவாடங்களுடன் ராணுவ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. ராணுவ தொழில் பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. இந்த தொழில் பூங்கா அமைய அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ராணுவ பெரு வழித்தடத்தை செயல்படுத்தும் நிறுவனமாக டிட்கோ வளர்ச்சி அடையும். ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அனைத்து அம்சங்களுடன் விரைவில் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூலூர் விமானப்படை தளத்தில் அனைத்து வகையான விமானங்களும் பழுது நீக்கம் செய்யப்பட்டு விமான சேவை மற்றும் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூலூர் விமான நிலையத்திற்கு அருகிலேயே தற்போது இந்த ராணுவ தளவாடத் தொழில் பூங்கா அமைந்து, விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்போது, பல்வேறு நாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழில் கேந்திரமாக கோவை மாறும் என்ற நம்பிக்கையுடன் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன அதிபர்கள் உள்ளனர்.

* நிலங்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘ராணுவ தொழில் பூங்கா அமைய உள்ள வாரப்பட்டி 7 கிராமங்களை உள்ளடக்கியது. கந்தம்பாளையம், பூசாரிபாளையம், வாரப்பட்டி, குளத்துப்பாளையம், சந்தராபுரம், புளிய மரத்து பாளையம், சுல்தான்பேட்டையில் ஒரு பகுதி என இயற்கையான சூழலில் உள்ளது. தொழில் பூங்கா அமைக்கப்படுவதால் இந்த பகுதியிலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு பெருமளவு உயர்ந்துள்ளது. சிறு அளவிலான நிலத்தை எடுத்து அரசு தொழில் பூங்கா அமைக்கும்போது அதை சுற்றியுள்ள கிராமங்கள் பெரும் அளவில் பயனடையும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். சராசரியாக அங்குள்ள நிலங்களுக்கு முந்தைய விலையைவிட மூன்று மடங்கு விலை தற்போது கூடியுள்ளது. இது நில உரிமையாளர்களையும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது’ என்றார்.

* பவுண்டரி தொழில் உயர்வடையும்
கோயம்புத்தூர் சிறு குறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்த தாமோதரன் கூறுகையில், ‘‘கோவையில் ராணுவ தொழில் பூங்கா அமைவது வரவேற்கத்தக்கது. தற்போது உள்ள சூழ்நிலையில் இரும்பு உருக்கும் பவுண்டரி தொழிற்சாலைகள் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் ஆகியவற்றால் பவுண்டரி தொழில் நலிந்து வரும் நிலையில் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை மேலும் ஒரு சுமையாக உள்ளது. இந்நிலையில் இது போன்ற தொழில் பூங்காக்கள் வருவதால் உலக நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் இங்கு தொழில் துவங்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த பகுதி வளர்ச்சி அடைவதுடன் கோவையில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலைகள் பயன்பெறும் என நம்புகிறோம். ஏற்கனவே ராணுவ தளவாடங்களுக்கு இரும்பு உருக்கு பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. ராணுவத் தொழில் பூங்கா வரும்போது இந்த உற்பத்தி மேலும் அதிகரிக்கும். இதனால் பவுண்டரி தொழில் உயர்வடையும் என நம்புகிறோம்’’ என்றார்.

* இரும்பின் தேவைகள் நிரந்தரமாக அதிகரிக்கும்
கோவை மாவட்ட வெல்டிங் தொழில் பேப்ரிகேஷன் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சிங்கை மாரிமுத்து கூறுகையில், ‘‘சூலூர் பகுதியில் புதிதாக சிப்காட் ராணுவ தொழில் பூங்கா அமைவதை வரவேற்கிறோம். தமிழ்நாடு முதல்வர் உலகம் முழுவதும் சென்று தமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீடுகளை எடுத்து வரும் நிலையில் இங்கு அமைய உள்ள ராணுவத் தொழில் தளவாடங்கள் தயாரிக்கும் பூங்காவில் இந்திய ராணுவத்திற்கு மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் ராணுவ தளவாடங்கள் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் தயாரிக்கும் பணியை இங்கு மேற்கொள்ளப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற தொழில் பூங்கா அமைக்கும்போது இரும்பின் தேவைகள் நிரந்தரமாக அதிகரிக்கும்’’ என தெரிவித்தார்.

The post சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கா பணி: விமானம், ஹெலிகாப்டர், உதிரிபாகங்கள் தயாரிப்பு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Military Industrial Park ,Coimbatore ,Government of Tamil Nadu ,Warapatti village ,Sulur taluka ,Coimbatore district ,Industrial Development Corporation ,TIDCO ,Army ,Industrial Park ,Dinakaran ,
× RELATED சிறுநீரகம் பாதுகாப்பு திட்டத்தில் 1.62 லட்சம் பேர் பயன்