- செங்கொட்டாய்
- தாம்பரம்
- Express
- நெல்லா
- தெற்கு
- மாவட்டம்
- செமங்கோட்டா
- சென்னை
- தாம்பரம் எக்ஸ்பிரஸ்
- தின மலர்
நெல்லை: செங்கோட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயிலின் நேரத்தையும், வழித்தடத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என தென்மாவட்ட ரயில் பயணிகள் விரும்புகின்றனர். பயண நேரம் அதிகம் காரணமாக பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு சென்று அடைய முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செங்கோட்டை தொடங்கி நெல்லை ரயில்வே வழித்தடமானது, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு செப்டம்பர் 21ம்தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக சென்னைக்கு செல்ல ஒரு நேரடி தினசரி ரயில் கூட இல்லாத வழித்தடமாக, மதுரை ரயில்வே கோட்டத்தில் செங்கோட்டை – நெல்லை வழித்தடம் உள்ளது. இந்நிலையில் சென்னைக்கு இந்த வழித்தடத்தின் வழியாக தினசரி சூப்பர் பாஸ்ட் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினரும், மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுத்தனர். இதன் விளைவாக தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் சேவையானது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பாரத பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி உள்ள பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும், 3 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், ஒரு மின்சாதன பெட்டியும் சேர்த்து மொத்தம் 17 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரசானது (எண் 20684) திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்தும், மறுமார்க்கமாக செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் தாம்பரத்திலிருந்தும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டால் தென்காசி, பாவூர்சத்திரம், அதற்கு அடுத்தாற்போல் 27 கிலோமீட்டர் தூரம் உள்ள அம்பாசமுத்திரத்தில் தான் நின்று செல்லும். இடைப்பட்ட ரயில் நிலையமான அதுவும் கிராசிங் ஸ்டேஷன் எனப்படும் முக்கிய ரயில் நிலையமான கீழக்கடையத்தில் இந்த ரயில் இதுவரை நிற்பதில்லை. இதன் காரணமாக கடையம் சுற்று வட்டார ரயில் பயணிகள், இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக தங்கள் ஊரில் இருந்து பேருந்துகளின் மூலம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். முன்னாள் எம்.பி.ஞானதிரவியம் இதற்காக ரயில்வே அமைச்சரை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை கடையம் ரயில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இந்த ரயிலுக்கு கடையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது.
மேலும் இந்த ரயில் இயக்கத்தின் மூலம் தெற்கு ரயில்வே ஒரு கல்லில் 3 மாங்காய் அடிக்கிறது என்பதும் பயணிகளின் குற்றச்சாட்டாகும். சென்னைக்கு இதுவரை தினசரி ரயில்களே இல்லாத வழித்தடமான செங்கோட்டை- நெல்லை வழித்தடம், விருதுநகர்- காரைக்குடி வழித்தடம், காரைக்குடி- திருவாரூர் வழித்தடங்கள் வழியாக இந்த ரயிலை ஊரெல்லாம் சுற்றி செல்லும் வகையில் ரயில்வே இயக்கி வருகிறது. இந்த 3 வழிதடத்திற்கு தேவையான ரயில்களை தனித்தனியே இயக்காமல், அனைத்து வழித்தடங்களையும் ஒன்றிணைத்து ஒரே ரயிலாக இயக்குவதால் பயண நேரம் அதிகமாகிறது. செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரட்டை அகல பாதையில் நேராக செல்லாமல், காரைக்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர் என பல்வேறு ஊர்களை சுற்றி, மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடைகிறது. அதாவது செங்கோட்டையிலிருந்து கணக்கிட்டால் 14 மணி நேரம் பயணம் நேரம் செலவாகிறது.
இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி கூறுகையில், ‘‘செங்கோட்டை – தாம்பரம் ரயிலின் வழித்தடம் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதே ரயிலானது செங்கோட்டையில் இருந்து நெல்லை, விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக, சிலம்பு எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடத்தில் பயணித்தால், 11 மணி நேரத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும். இதனால் பயணிகளின் நேரமும், பணமும் மிச்சமாகும்.
இந்த ரயிலில் மொத்த முன்பதிவு இருக்கைகள் 932 ஆக இருக்கும் நிலையில், கடந்த 7ம் தேதி திங்கட்கிழமை முன்பதிவு செய்து பயணித்த ரயில் பயணிகளின் பயண விவர பட்டியலின் விவரப்படி, செங்கோட்டை முதல் நெல்லை வரை உள்ள ரயில் நிலையங்களில் மொத்தம் 605 பேரும், விருதுநகர் அருப்புக்கோட்டை காரைக்குடி இந்த மூன்று ரயில் நிலையங்களையும் சேர்த்து 235 பேரும் ரயிலில் பயணித்துள்ளனர். இதன்படி 90 சதவீதம் பேர் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பயணிகளே இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 10% ரயில் பயணிகளே, காரைக்குடியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வரை இந்த ரயிலை உபயோகப்படுத்தி உள்ளனர்.
வெறும் 10 சதவீத பயணிகளுக்காக இந்த ரயிலை நீண்ட சுற்றுவட்ட பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும். காரைக்குடியில் இருந்து இந்த ரயிலை புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு வழித்தடத்தை மாற்றி இயக்க ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். இக்கோரிக்கை ஏற்கப்பட்டால், செங்கோட்டையில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டாலே, இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்குள் சென்னை தாம்பரத்தை சென்று அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.’’ என்றார்.
The post செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரசின் வழித்தடம் மாற்றப்படுமா?: ஊரெல்லாம் சுற்றி செல்வதாக பயணிகள் புலம்பல் appeared first on Dinakaran.