×
Saravana Stores

ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்: ஒருவர் தப்பி வந்துவிட்ட நிலையில் பரபரப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு இரண்டு ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்ற நிலையில், ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துவிட்டார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜம்மு – காஷ்மீரில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிக்குள் இரண்டு ராணுவ வீரர்களை தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அதில், ஒருவர் மட்டும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துவிட்டார். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் மற்றொருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நடத்திய சோதனையில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கி, கையெறி குண்டுகளை பறிமுதல் செய்தனர். அதே மாவட்டத்தில் தற்போது ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டிருப்பது, அவர்கள் மூவரையும் விடுவிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் டெரிடோரியல் ராணுவ பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். முன்னதாக கடந்த 2020 ஆகஸ்டில் காஷ்மீரில் ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது ஆடைகளை வீட்டின் அருகே கண்டுபிடித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம், அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 29 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். தற்போது அதேபகுதியில் வீரர் ஒருவர் கடத்தப்பட்டதால், அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

The post ஜம்மு – காஷ்மீரில் நேற்றிரவு 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்: ஒருவர் தப்பி வந்துவிட்ட நிலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Jammu ,Jammu and ,Kashmir ,and Kashmir assembly ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரின் அக்நூரில்...