×

காதல் திருமணமான 9 மாதத்தில் தனக்குத்தானே போதை ஊசி போட்டு கொண்ட வாலிபர் பலி: நண்பர்கள் கண்ணெதிரே பரிதாபம்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே காதல் திருமணமான 9 மாதத்தில் தனக்குத்தானே போதை ஊசி போட்டு கொண்ட வாலிபர், நண்பர்கள் கண்ணெதிரே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கௌதம்ராஜ் (21). வண்டி குதிரைகளுக்கு முடிவெட்டும் தொழிலாளியான இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அனுசுயா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கௌதம்ராஜ்க்கு கஞ்சா புகைப்பது, போதை ஊசி போட்டு கொள்வது ஆகிய பழக்கங்கள் இருந்துள்ளது. இதனை அனுசுயா கண்டித்துள்ளார். ஆனாலும் கௌதம்ராஜால் விடுபட முடியவில்லை.

நேற்று முன்தினம் கௌதம்ராஜ் வீட்டிற்கு அவரது நண்பர்கள் சரவணன், தர் ஆகியோர் வந்துள்ளனர். வீட்டின் முன் பேசி கொண்டிருந்த மூவரும் அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் நண்பர்கள் பதறியடித்து கொண்டு கீழே வந்தனர். அங்கிருந்த கதிர்வேலு என்பவரை அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர். அதனைக்கண்டு திடுக்கிட்ட அனுசுயா. தனது தாயுடன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு, கௌதம்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே, அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, கௌதம்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக நண்பர்கள் மற்றும் அனுசுயாவிடம் விசாரித்தபோது, மொட்டை மாடியில் போதை தரும் மருந்தை ஊசி மூலம் கையில் போட்டு கொண்டபோது கௌதம்ராஜ் மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர். உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மொட்டை மாடியில் இருந்த டம்ளர், ஊசி, சிரிஞ்ச் ஆகியவற்றை கைப்பற்றினர். கௌதம்ராஜ்க்கு போதை ஊசி மருந்து எங்கிருந்து யார் மூலம் கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post காதல் திருமணமான 9 மாதத்தில் தனக்குத்தானே போதை ஊசி போட்டு கொண்ட வாலிபர் பலி: நண்பர்கள் கண்ணெதிரே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Gauthamraj ,Thattanguttay Arunthathiyar Street ,Kumarapalayam, Namakkal District ,
× RELATED குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி