×

சர்க்யூட் ஹவுஸ், காருக்குள் பெண்ணிடம் நெருக்கம்; காங்கிரஸ் எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு: கர்நாடகா அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது, சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரில், ‘கடந்த 2022ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்ட போது வினய் குல்கர்னியின் அறிமுகம் கிடைத்தது. அவர் என் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அவ்வப்போது என்னை தொடர்பு கொண்டு பேசுவார். இரவு 11 மணிக்கு மேல் போன் செய்து கொண்டு கூட நலம் விசாரிப்பார்.

அவர் தனது ஹெப்பலின் இல்லத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். நான் மறுத்ததால், ரவுடிகளை கொண்டு மிரட்டினார். மேலும் வலுக்கட்டாயமாக என்னை தேவனஹள்ளி மற்றும் தர்மஸ்தலாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்து எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிரட்டினார். பின்னர் 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெல்காம் சர்க்யூட் ஹவுஸுக்கு வருமாறு என்னை அழைத்தார். அவசரமாக அழைத்ததால், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பெல்காம் சென்றேன். அன்றிரவு என்னை பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பி ஓடிவந்துவிட்டேன். மற்றொரு சம்பவத்தின் போது, என்னை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட புகாரின் அடிப்படையில், சஞ்சய் நகர் போலீசார் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அதேபோல் வினய் குல்கர்னியின் உதவியாளர் அர்ஜூன் மீதும் மிரட்டல் குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வினய் குல்கர்னியும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக எம்எல்ஏ தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் டிவியின் தலைவர் ராகேஷ் ஷெட்டி மற்றும் அந்த பெண் மீதும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சர்க்யூட் ஹவுஸ், காருக்குள் பெண்ணிடம் நெருக்கம்; காங்கிரஸ் எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு: கர்நாடகா அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Circuit House ,MLA ,Karnataka ,Bangalore ,Karnataka Congress ,Vinay Kulkarni ,Karnataka State Dharwad Rural Constituency Congress ,Sanjay Nagar Police ,Congress ,Dinakaran ,
× RELATED ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய...