வேலூர், அக்.9: வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு நேற்று படகுகளை வைத்து த்த்ரூபமாக செய்து காட்டினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் எவை என கண்டறியப்பட்டு அந்த இடங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது அதில் சிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து தமிழக போலீசார் சார்பில் பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னையில் இயங்கி வரும் கமாண்டோ பயிற்சி மையம் மூலம் தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை, சட்ட ஒழுங்கு, பெண் காவலர் என மொத்தம் 60 பேர் கொண்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்க சென்னை கமாண்டோ பயிற்சி மைய சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தலைமைக் காவலர்கள் சுவிக்கின் ராஜ், ஸ்ரீதர், வசந்தகுமார் ஆகிய பயிற்சியாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை பேரிடர் மீட்பு காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என போலீசாருக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
அப்போது கோட்டை அகழியில் ஒருவர் மூழ்குவது போலவும், அவரை மீட்புக் குழுவினர் படகில் சென்று மீட்பது போலவும் தத்ரூபமாக செய்து காட்டினர். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மழை வெள்ளத்தின்போது சிக்குபவர்களை படகுகளில் எவ்வாறு மீட்பது? அவர்களுக்கு படகில் எவ்வாறு முதலுதவி அளிப்பது? என செயல்விளக்கம் அளித்தனர். மேலும் மரம் வெட்டும் இயந்திரங்களை பயன்படுத்தும் முறை, இரவில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் டவர் லைட் பொருத்தி எவ்வாறு மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது? வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைப்பது? என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
The post வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? ரப்பர் படகில் சென்று தத்ரூபமாக செய்து காட்டினர் வேலூர் கோட்டை அகழியில் 60 போலீசாருக்கு செயல்விளக்கம் appeared first on Dinakaran.