×
Saravana Stores

மாசடைந்த நொய்யல், பவானி, அமராவதி, கவுசிகா: தொலைந்து போன காவிரியின் துணை நதிகள்

‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’, ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாத இடம் பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 320 கிமீ தூரமும், தமிழகத்தில் 416 கி.மீ தூரமும், இரு மாநில எல்லையில் 64 கி.மீ தூரமும் பாயும் காவிரி ஆற்றின் தண்ணீர் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. காவிரியில் கர்நாடக மாநிலத்தில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உட்பட 6 துணை நதிகளும், தமிழ்நாட்டில் பவானி, அமராவதி, நொய்யல், கவுசிகா என்ற துணை நதிகளும் இருக்கின்றன.

கேரளா மாநிலத்தின் அட்டப்பாடியில் துவங்கும் பவானி ஆற்றில் 13 உப நதிகள், நீரோடைகளும், ஆனைமலை மஞ்சப்பட்டியில் குதிரை ஆறு என்ற பெயரில் உருவாகும் அமராவதியில் பாம்பாறு, சின்னாறு, தேவாறு உட்பட 16 உப நதிகளும், சிறுவாணி அடிவாரத்தில் உருவாகும் நொய்யலில் குஞ்சாரான் முடி, சின்னாறு, பெரியாறு, வெள்ளிங்கிரி உட்பட 8 உப நதிகளும், குருடி மலையில் உருவாகும் கவுசிகா நதியில் தன்னாசிபள்ள ஆறு, தெக்கலூர் ஆறு உட்பட 6 கிளை நதிகளும் இணைகிறது. சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட துணை நதிகளும், 140க்கும் மேற்பட்ட உப நதிகளும் காவிரியில் இணைகிறது.

இதன் காரணமாகவே, துவக்கத்தில் ‘ஆடு தாண்டும்’ அளவில் இருந்த காவிரி முடிவில் ‘அகண்ட காவிரியாக’ உருப்பெற்றிருந்தது. காவிரியின் முக்கிய துணை நதிகளான பவானி, அமராவதி, நொய்யல், கவுசிகா நதியை கடந்த 30 ஆண்டிற்கு மேலாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரியில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தண்ணீர் பவானியில் இருந்து வந்து கலக்கிறது. இந்த தண்ணீரை கேரளா 3 இடத்தில் தடுப்பணை கட்டி தடுத்துவிட்டது.
கோவை, திருப்பூர், ஈரோட்டில் மாசு கழிவு நீர் பவானியில் விடப்படுகிறது.

இதிகாச பெருமை கொண்ட நொய்யல் ஆறு, பாசன திட்டத்தில் இருந்து கைவிடப்படும் நிலையில் இருக்கிறது. 20 தடுப்பணை, 28 குளங்கள் இந்த ஆற்றை நம்பி இருக்கிறது. காவிரியை புனிதமாக்கும் தீர்த்தம் என்ற பெருமை நொய்யல் ஆற்றுக்கு இருந்தது. ஒரத்துப்பாளையம் அணை மற்றும் கோவை, திருப்பூர் சாயக் கழிவால் நொய்யல் அழியும் நிலைக்கு சென்றுவிட்டது. நொய்யல் ஆற்றின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் இருக்கிறது. 2,300 ஆண்டிற்கு முன் உருவான கவுசிகா நதி திருப்பூர், சுல்தான்பேட்டை வழியாக பாய்ந்து காவிரியில் இணைகிறது.

இந்த நதி பல இடங்களில் துண்டாகிவிட்டது. நதியை முழுவதும் தேடி கண்டுபிடித்து ஒப்படைக்க பல ஆண்டாக விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. துணை நதிகளின் லட்சணமே இந்த கதியில் இருப்பதால், துணை நதிகளுடன் சேரும் உப நதிகள், ஓடைகளின் நிலைமை இதை விட பரிதாபம். பல ஓடைகள் மனைகளாக, பாதைகளாக, மைதானங்களாக, மேய்ச்சல் நிலங்களாக மாறிவிட்டன. காவிரி நீரை முழுமையாக தர மறுத்து கர்நாடகா அடம் பிடித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு காவிரியில் நீர் வரத்தை அதிகரிக்க அதன் துணை நதிகளையும், அதனுடன் இணைந்த உப நதிகளையும் சீரமைக்க வேண்டும். ஆனால், அதற்காக இதுவரை எந்த திட்டமும் மேற்கொள்ளவில்லை. மாறாக, 50க்கும் மேற்பட்ட உபநதி, ஓடைகளை நீர் திட்டங்களில் இருந்து நீக்கிவிட்டது.

* தேசிய நதி நீர் திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்குமா?
பவானி ஆறு சீரமைப்பு திட்டத்திற்கு 300 கோடி ரூபாயும், அமராவதி ஆறு மேம்பாட்டு திட்டத்திற்கு 200 கோடி ரூபாயும், கவுசிகா நதியை மீட்க 210 கோடி ரூபாயும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேசிய நதி நீர் திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இந்த துணை நதிகள், உப நதிகள் மீட்கப்பட்டால் காவிரி நீர் காய்ந்து போகாது. காவிரியின் நீர் ஆதாரங்களை காக்க தனியாக எந்த திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அரசிடம் இருந்து காவிரி நீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே மேட்டூர் உள்ளிட்ட அணைகளும், வழியோர மாவட்டங்களும், நீர் தேக்கங்களும் பயன்பெற முடியும் என்ற நிலையிருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

* நொய்யலுக்கு ரூ.990 கோடி
ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைப்பு நொய்யலை சீரமைக்க 990 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்துள்ளது. தங்களால் 60 சதவீத தொகையை வழங்க முடியும் எனவும் தெரிவித்தது. ஆனால், நிதி ஒதுக்கீடு முறையாக நடக்கவில்லை. கோவை, திருப்பூர் மாநகராட்சியின் மொத்த கழிவுகளும் நொய்யலில் திருப்பி விடப்பட்டுள்ளது. கழிவு நீரை நொய்யலில் திருப்பி விடக்கூடாது என ஜல் சக்தி அமைப்பு எச்சரித்துள்ளது. நொய்யல் ஆறு சீரமைக்க கோவை மாநகராட்சி தனியாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இதில் 200 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியை அடைய நொய்யல் 158 கிமீ தூரம் பாய்வதாக தெரிகிறது. இவற்றை தனித்தனியாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சீரமைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

* விவசாய தோட்டமான கவுசிகா நதி
பவானி ஆற்றை சீரமைக்க பில்கேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அமைப்பினர் முடிவு செய்து ஆய்வுக்கு சென்றனர். ஆனால், அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கவுசிகா நதி பல கிராமங்களில் காணாமல் போய்விட்டது. சிலர் விவசாய தோட்டமாக கருதி, பயிர் சாகுபடி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நதியின் நீள அகலத்தை அளந்து எல்லைக்கல் நட்டு வைக்க கூட செய்யாமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். அமராவதி ஆறு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வளம் கொழிக்கச் செய்யும் அட்சய பாத்திரமாக இருக்கிறது. இதை சீரமைக்காமல் சில இடங்களில் வாய்க்கால்போல் விட்டுவிட்டனர் என விவசாயிகள் குமுறுகின்றனர்.

The post மாசடைந்த நொய்யல், பவானி, அமராவதி, கவுசிகா: தொலைந்து போன காவிரியின் துணை நதிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி...