×
Saravana Stores

‘ரெய்டு’ வராமல் இருக்க விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

சேலம்: ரெய்டுக்கு வராமல் இருக்க விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த சேலம் மேற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 23ம் தேதியும், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 25ம் தேதியும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி முறையே ரூ.1.26 லட்சம், ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மேட்டூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீனாகுமாரி, போட்டோகிராபர் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 10 நாட்களாக விடுமுறையில் இருந்த சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் (58), நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார்.

விஜிலென்ஸ் ரெய்டு பற்றி கேள்விப்பட்டதும் அவர் சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலக இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை சந்தித்து, ரெய்டு வராமல் இருக்கவும், அப்படியே வந்தால் முன்கூட்டியே தகவல் கொடுக்கவும் கூறி ரூ.1 லட்சம் லஞ்சமாக தருவதாக பேரம் பேசியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜியிடம் புகாரளித்தார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே சதாசிவம் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அதிரடியாக சதாசிவத்தை சுற்றிவளைத்து கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

The post ‘ரெய்டு’ வராமல் இருக்க விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem West ,23rd ,Salem District Atoor Regional Transport Office ,Mettur Regional Transport Office ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்தது!