- கிண்டி ரேஸ்கோர்ஸ்
- சென்னை மாநகராட்சி
- சென்னை
- கிண்டி ரேஸ் கோர்ஸ்
- கிண்டி ரேஸ்கோர்ஸ்
- சென்னை கார்ப்பரேஷன்
- தின மலர்
சிறப்பு செய்தி
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது கிண்டி ரேஸ் கோர்ஸ். 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கான வாடகை பாக்கியை 1970ம் ஆண்டு முதல் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, 1970ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கியான ரூ.730 கோடியே 86 லட்சத்தை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வாடகை பாக்கியை செலுத்த தவறினால், ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, தமிழக அரசே நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்றும், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தமிழக அரசு ரேஸ் கோர்ஸ்சுக்கு விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து நிலத்தை எடுத்துக் கொண்டது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டது. ரேஸ் கோர்ஸ் நிலத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டதும், 160 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பருவமழை காலங்களில் சென்னை பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். மேலும், வேளச்சேரி ஏரி தொடர்பான வழக்கில் பசுமைத் தீர்ப்பாயமும் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தில் புதிய நீர்நிலைகளை உருவாக்க பசுமைத் தீர்ப்பாயமும் அறிவுறுத்தியிருந்தது.
அதாவது, ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்’ என்று யோசனை தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது. மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது. எனவே, சமூக ஆர்வலர்களின் அறிவுரை, பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல், வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட பல காரணங்களால் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலைகளை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், 160 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே 3 குளங்கள் உள்ள நிலையில், தற்போது புதிதாக 4வதாக ஒரு குளத்தை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக குளம் தோண்டும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஏற்கனவே உள்ள குளங்களையும் தூர்வாரி அகலப்படுத்தவும், அவற்றை ஆழப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தோண்டும் இந்த புதிய குளம், மற்றும் தூர்வாரும் பணிகளால் 100 மில்லியன் நீர் சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 3 குளங்களில் 30 மில்லியன் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த குளங்களை உருவாக்கும் பணிகளை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பே முடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சென்ைன மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலத்தில் சென்னை மாநகராட்சி வெட்டும் இந்த புதிய குளங்கள் ஒவ்வொன்றும் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. மொத்தம் 10 அடி ஆழத்திற்கு குளம் வெட்டப்பட உள்ளது. குளங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டு விட்டது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது முழு வீச்சில் குளங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த புதிய குளங்கள் உருவானால், மழை காலங்களில் அதிகளவு பாதிக்கப்படும் வேளச்சேரியில் பெரிய அளவுக்கு பாதிப்புகள் தவிர்க்கப்படும். மேலும், கிண்டி மற்றும் அடையாறிலும் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மழைநீர் வடிகால்கள் மூலமாக ராஜ்பவன் கால்வாய் வழியாக, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் உருவாக்கப்பட உள்ள குளங்களுக்கு மழைநீரை திருப்பிவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post நீர்நிலைகளாக மாறும் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம்; புதிய குளம் அமைக்கும் பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி: 100 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க திட்டம் appeared first on Dinakaran.