சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி அக்.6 பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் அக் 6-ம் தேதி மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். வான் சாகச நிகழ்ச்சியின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெருமளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த 3 மணி நேரத்திற்கு சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 230 பேர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.