×
Saravana Stores

விவசாயத்தை தொடர்ந்து தொழில் வளத்திலும் முதன்மையாகிறது திருவண்ணாமலை மாவட்டம்: 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் சிப்காட்; 3,174 ஏக்கரில் விரிவுபடுத்தும் பணிகள் தீவிரம்; மேலும் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் அதிகளவில் கிராம ஊராட்சிகளை கொண்டது திருவண்ணாமலை மாவட்டம். ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி 6,188 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இம்மாவட்டம், மாநிலத்தின் 4வது மிகப்பெரிய மாவட்டமாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலும், பிரசித்தி பெற்ற கிரிவலமும் இம்மாவட்டத்தின் முக்கிய அடையாளம். தொழில் வளத்தில் பின்தங்கிய மாவட்டம், வேளாண்மையை மட்டுமே பிரதானமாக கொண்டது.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 24.64 லட்சத்தில், சுமார் 70 சதவீதம் பேர் வேளாண்மையை மட்டுமே நேரடியாக நம்பியிருக்கின்றனர். ஆற்றுப்பாசனம், அணை பாசனம் குறைவு. எனவே, ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை சார்ந்து மட்டுமே விவசாயம் நடக்கிறது. மழை பொய்த்தால், வாழ்க்கையும் பொய்த்துவிடும் என்ற நெருக்கடி நிலை. விவசாயம் செய்ய முடியாத காலங்களில், இம்மாவட்ட மக்கள் பிழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இடம் பெயரும் நிலையும் இருக்கிறது.

வேலைவாய்ப்புக்காகவும், தொழில் வளத்துக்காகவும் ஏங்கித்தவித்த இம்மாவட்டத்துக்கு, 2006ம் ஆண்டு முதன்முதலில் சிப்காட் தொழிற்பூங்காவை செய்யாறு பகுதியில் கொண்டுவந்தவர் அப்போதைய முதல்வர் கலைஞர். அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் செய்யாறு சிப்காட்டை தொடங்கி வைத்தார். செய்யாறு அருகே மாங்கால் பகுதியில், சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கியதோடு, தமிழக அரசுக்கும் தைவான் குரோத் லிங்க் நிறுவனத்திற்கும் இடையே ரூ.300 கோடியில் காலணி தொழிற்சாலை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, தமிழ்நாடு அரசு 273 ஏக்கர் நிலத்தை வழங்கியது. குரோத் லிங்க் நிறுவனம், பெங்க் டே எண்டர்பிரேசஸ் என்னும் தைவான் நாட்டு ஷூ தயாரிப்பு நிறுவத்தின் துணை நிறுவனம்.

விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்கள், ஸ்கேட்டிங் ஷூக்கள், சாதாரண ஷூக்கள் போன்றவற்றை தயாரிப்பதில் உலக புகழ்பெற்ற நிறுவனம் என்பது சிறப்பு அம்சம். செய்யாறு சிப்காட்டில் 4 காலணி தொழிற்சாலைகள், 2 பெயின்ட் நிறுவனங்கள், டைல்ஸ் நிறுவனம், எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சிமென்ட் கலவை கலப்பு இயந்திரம், பொக்லைன் இயந்திரம் பொருத்துதல் நிறுவனம், ரப்பர் பெல்ட், 3 கெமிக்கல் நிறுவனங்கள், லாரி இன்ஜின் உதிரி பாக தொழிற்சாலை, கார் என்ஜின் உதிரி பாக தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிறுவனங்கள் மூலம், செய்யாறு சிப்காட் பகுதியில் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவானது.

சென்னை விமான நிலையம் 70 கிமீ தூரம், சென்னை துறைமுகம் 90 கிமீ தூரம், காஞ்சிபுரம் ரயில் நிலையம் 15 கிமீ தூரம், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து வசதி என்று பல்வேறு சிறப்புகளை கொண்டதால், செய்யாறு சிப்காட், தொழில் முதலீட்டாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியாலும், அரசு தரப்பில் தொழில் முதலீட்டாளர்களுக்கு அளித்த ஊக்கத்தாலும், செய்யாறு சிப்காட் படிப்படியாக வளர்ந்து 2,937 ஏக்கர் பரப்பளவில் 80 மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் இயங்கும், இரண்டு அலகுகளுடன் செயல்படும் நிலையை அடைந்தது.

குறிப்பாக, 25 ஆயிரம் பெண்களும், 5 ஆயிரம் ஆண்களும் 4 கிளைகள் கொண்ட ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் சிறப்பையும் செய்யாறு சிப்காட் மட்டுமே பெற்றிருக்கிறது. தொடர்ந்து, தமிழக அரசின் சீரிய முயற்சிகள் அடுத்தடுத்து பல்வேறு வெளிநாட்டு கம்பெனிகள் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பேரில் செய்யாறு சிப்காட்டில் சுமார் 55,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது இரு அலகிலும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் மூலம் செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்கள், வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு, போளூர், திருவண்ணாமலை என்று மாவட்டம் முழுவதும், அண்டை மாவட்டங்களில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, கலவை, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட தாலுகாக்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். செய்யாறு சிப்காட் தொடங்கி கடந்த 15 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு மேல் நேரடி வேலைவாய்ப்பையும் மறைமுகமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக உயர்வு பெற்று தன்னிறைவு பெற்றுள்ளனர்.

குறிப்பாக, நெரிசல் மிகுந்த சென்னை போன்ற பெருநகரங்களை தவிர்த்து, சென்னைக்கு அருகில் அமைந்துள்ள செய்யாறு சிப்காட் தொழில் முதலீட்டாளர்களின் விருப்பத்துக்குரியதாக மாறியிருக்கிறது. இதனால் 3,174 ஏக்கரில் செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவின் மூன்றாவது அலகு அமைக்க தேவையான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. விரைவில், மூன்றாவது அலகு அமையும் நிலை ஏற்பட்டால், விவசாயம் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டம், தொழில் வளத்திலும் முதன்மையான மாவட்டம் எனும் சிறப்பை அடையும். அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பட உள்ளது.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளது. 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியாவிலேயே முதலீடுகளை செய்ய சிறந்த மாநிலமாக மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். கற்கும் மாணவர்கள், கற்ற மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தாய்மார்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும் பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வரும் தமிழக அரசை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

* தொழில் முதலீட்டாளர்களின் வேடந்தாங்கல்
செய்யாறு சிப்காட் தமிழ்நாட்டின் 2வது மிகப்பெரிய சிப்காட் எனும் தரநிலையை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொழில் முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால், தொழில் முதலீட்டாளர்களின் வேடந்தாங்கல் எனும் சிறப்பை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. உலகெங்கும் இருந்து பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க தேர்வு செய்யும் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது.

The post விவசாயத்தை தொடர்ந்து தொழில் வளத்திலும் முதன்மையாகிறது திருவண்ணாமலை மாவட்டம்: 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் சிப்காட்; 3,174 ஏக்கரில் விரிவுபடுத்தும் பணிகள் தீவிரம்; மேலும் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Chipkot ,Tamil Nadu ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு!