இந்தியா முழுவதும் 25 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு விசைத்தறிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பல்லடம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. காடா, கிரே, ரயான் உள்ளிட்ட பல்வேறு துணி ரகங்கள் தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
விசைத்தறியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச சீருடை துணிகள் உள்ளிட்டவைகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 மாதகாலம் விசைத்தறி நெசவாளர்கள் வேலை உறுதி செய்யப்படுகின்றது.
மின் கட்டணம் என்பது விசைத்தறி கூடங்களுக்கு பெரும் நிதிச்சுமையாக இருப்பதால் விசைத்தறி கூடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது விசைத்தறி நெசவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவால் சிறு, குறு விசைத்தறியாளர் முழு பயன் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் கூறியதாவது: திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதே போல 1,000 முதல் 1,500 யூனிட் வரையிலான மின்கட்டணத்தில் யூனிட்டுக்கு 35 பைசாவும், 1,500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய போது 40 ஆயிரம் மின் இணைப்புகள் கொண்ட 2 லட்சம் விசைத்தறிகள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இயக்கி வந்தன.
1000 யூனிட்டாக உயர்த்தப்பட்ட பிறகு ஜீரோ மின் கட்டணம் செலுத்தும் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 78 ஆயிரமாகவும், 3 லட்சம் விசைத்தறிகளாகவும் உயர்ந்துள்ளது. 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வந்த போது 50 நாட்கள் மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டு வந்தது. மீதமுள்ள 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டன. 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்ட பிறகு 60 நாட்களும் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றது. ஜீரோ கட்டணத்தில் சிறு, குறு விசைத்தறியாளர்கள் முழுமையாக பயனடைந்துள்ளது போல பெரிய விசைத்தறியாளர்களுக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் மின் கட்டணம் மீதமாகி உள்ளது. இதே போல மின் கட்டண குறைப்பும் விசைத்தறியாளர்களுக்கு பெரும் நிதிச்சுமையை குறைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* 1,00,000 கைத்தறியாளர்கள் பயன்
விசைத்தறி நெசவாளர்களை போல கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 76 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்த நிலையில், இலவச மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டதால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் நெசவாளர்கள் பயனடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* ரூ.6 ஆயிரம் சேமிக்கும் நெசவாளர்கள்
விசைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரத்தை 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தியதன் மூலம் ரூ.6 ஆயிரம் சேமிப்பாவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது 1000 யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளர்கள் எந்த கட்டணமும் செலுத்துவதில்லை. சில நெசவாளர்கள் 1000 யூனிட்டுக்கு மேலாக மின்சாரம் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டுக்கான கட்டணம் கிடையாது. அந்த வகையில் அவர்கள் 2 மாதங்களுக்கு சராசரியாக ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் சேமிக்கிறார்கள்.
The post இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக அதிகரிப்பால் ஜீரோ கட்டணத்தில் இயங்கும் மூன்று லட்சம் விசைத்தறிகள்: பெரும் நிதிச்சுமை குறைந்து உள்ளதாக மகிழ்ச்சி appeared first on Dinakaran.