×

அலமாதியில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையம் திறப்பு: ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு

புழல்: அலமாதியில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையத்தினை மீண்டும் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் திறந்து வைத்தார். செங்குன்றம் அடுத்த அலமாதி – திருவள்ளூர் நெடுஞ்சாலை, சிவன் கோயில் அருகே சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், கிராமப்புற மருத்துவ சேவை மையம் 1952ம் வருடம் முதல் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த கொரோனா காலத்தில் 2019ம் ஆண்டு கிராமப்புற மருத்துவ சேவை மையம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கி, கிராமப்புற மருத்துவ சேவை மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம் மட்டுமின்றி குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை, ரத்த பரிசோதனை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் அலமாதி, எடப்பாளையம் பாலாஜி நகர், பூச்சி அத்திப்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு, சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்வில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை அலுமினி அசோசியேசன் தலைவர் வரதராஜன், துணை தலைவர் மாலதி, செயலாளர் ராமலிங்கம், இணை செயலாளர் லக்ஷ்மண மூர்த்தி, துணை செயலாளர் சந்திரசேகர், சமூக மருத்துவத்துறை தலைவர் சீனிவாசன், டாக்டர் காளிதாஸ், டாக்டர் சிட்டிபாபு, செயலாளர் செந்தில், இணை செயலாளர் யுவஸ்ரீ, மருத்துவ கல்லூரி முன்னாள் மற்றும் இந்நாள் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டமைப்பு மருத்துவர்கள், கிராம நிர்வாகிகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அலமாதியில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமப்புற மருத்துவ சேவை மையம் திறப்பு: ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rural Medical Service Center ,Corona ,Alamati ,Panchayat Council ,President ,Puzhal ,Stanley Government Medical College ,Tamilvanan ,Dinakaran ,
× RELATED படம் பிடிக்காமல் பாதியில் சென்றால் 50%...